ஈரோடு மாவட்டம், ஆட்டையாம்பாளையம் அருகே பவானி வாய்க்கால் மதகு பகுதியில், வெள்ளை நிற சாக்கு மூட்டை மிதந்து கொண்டிருந்தது. அதிலிருந்து துர்நாற்றம் வீசியதை அடுத்து, தகவலறிந்த போலீசார், சம்பவ இடத்திற்கு வந்து, மூட்டையை திறந்து பார்த்தனர்.
அதில், வடமாநில வாலிபரின் உடல், அழுகிய நிலையில் கிடந்தது. இறந்த நபரின், பின் மண்டையில் பலத்த காயம் இருந்தது. போலீசார் விசாரணையில், அந்த நபர் அடித்து கொல்லப்பட்டு, வாய்க்காலில் வீசப்பட்டது தெரியவந்தது. இறந்த நபர் யார்? என்பதும், அவர் எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்ற விவரம் தெரியவில்லை.
இச்சம்பவம் குறித்து, சித்தோடு போலீசார் வழக்கு பதிவு செய்து, மோப்ப நாயின் உதவியுடன் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் கொலை செய்யப்பட்டவர், உத்திரபிரதேசம் மாநிலத்தை சேர்ந்த முகமது பைசல் (22) எனத் தெரிந்தது. இவரும், இவருடன் முகமது நூர் (26), 18 வயதுடைய சிறுவன் என மூன்று பேரும் சில மாதங்களுக்கு முன்பு, நொச்சிப்பாளையம் புதூர் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் தங்கி, துணியை அரைத்து நூலாக்கும் வேலையை செய்துவந்தனர். முகமது பைசலுக்கு, முகமது நூர் மனைவியுடன் கள்ளத்தொடர்பு இருந்த நிலையில், முகமது நூர் அவரை கண்டித்துள்ளார்.
கடந்த 12ஆம் தேதி, மூவரும் மது அருந்திவிட்டு, கள்ளக்காதல் விவகாரம் தொடர்பாக பேசுகையில், முகமது பைசலுக்கும், முகமது நூறுக்கும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த முகமது நூர் மற்றும் சிறுவன் சேர்ந்து முகமது பைசிலை கட்டை கொண்டு, தலையில் தாக்கி கொலை செய்து, சாக்கு பையில் கட்டி வாய்க்காலில் வீசினர். மேலும் இந்த கொலையில், வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா? என்று போலீசார் விசாரித்து வருகின்றனர்.
