கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி மகளிர் காவல் நிலையத்தில் காவல்துறையினர் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. செலகரச்சல் பகுதியைச் சேர்ந்த மயில்சாமி என்பவரது மகள் சண்முகப்பிரியா (25), மலுமிச்சம்பட்டி பகுதியைச் சேர்ந்த ராம் பிரகாஷ் என்பவரை 4 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்துத் திருமணம் செய்துகொண்டுள்ளார். தம்பதியரிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாகச் சண்முகப்பிரியா கணவரை விட்டு விலகுவதாகத் தெரிவித்துள்ளார். இதனால் மனவேதனை அடைந்த ராம் பிரகாஷ், இருவரும் தனிமையில் நெருக்கமாக இருந்த அந்தரங்க வீடியோக்களைத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இதுகுறித்துச் சண்முகப்பிரியா கருமத்தம்பட்டி மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், விசாரணைக்கு அழைக்கப்பட்ட ராம் பிரகாஷ் காவல் நிலையத்திற்கு வந்தபோது, அங்கு ஆத்திரத்துடன் காத்திருந்த பெண்ணின் உறவினர்கள் திடீரென அவர் மீது தாக்குதல் நடத்த முயன்றனர். இதனைப் பாதுகாப்புப் பணியில் இருந்த போலீசார் தடுத்து நிறுத்த முயன்றபோது, ஆத்திரமடைந்த பெண்ணின் வீட்டார் போலீசார் மீதும் தாக்குதல் தொடுத்தனர். இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த துணைக்காவல் கண்காணிப்பாளர் கரிகால் பாரி சங்கர் நேரில் சென்று விசாரணை நடத்தியதுடன், சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் தாக்குதலில் ஈடுபட்டவர்களைக் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
