புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே உள்ள கீழவாண்டான்விடுதியைச் சேர்ந்தவர் சூரியபிரகாஷ். தமிழக வெற்றிக் கழகத்தின் உள்ளூர் நிர்வாகியான இவரும், சரண்யா என்பவரும் காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். கடந்த ஆகஸ்ட் 16-ஆம் தேதி இரவு, குடும்பப் பிரச்சனை காரணமாக தனது கணவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாக சரண்யா மழையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதனடிப்படையில், காவல்துறையினர் முதலில் சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர்.
சூரியபிரகாஷின் மரணத்தில் அவரது உறவினர்களுக்கு சந்தேகம் எழுந்ததால், முறையான விசாரணை கோரி அவர்கள் போராட்டம் நடத்தத் திட்டமிட்டிருந்தனர். இந்நிலையில், காவல்துறையினருக்குக் கிடைத்த உடற்கூறாய்வு மற்றும் தடய அறிவியல் முடிவுகள் வழக்கின் போக்கையே மாற்றின. அந்த அறிக்கைகளில், இறந்தவரின் உடலில் பலத்த காயங்களும், எலும்பு முறிவுகளும் இருந்தது உறுதி செய்யப்பட்டது. இதனால், இது தற்கொலை அல்ல என்பதை உணர்ந்த போலீசார், அவரது மனைவி சரண்யாவிடம் தங்கள் தீவிர விசாரணையைத் திருப்பினர்.
கிராம நிர்வாக அலுவலர் முன்னிலையில் நடைபெற்ற விசாரணையில், கணவரைத் தானே அடித்துக் கொலை செய்துவிட்டு தற்கொலை போல நாடகமாடியதை சரண்யா ஒப்புக்கொண்டார். திருப்பூரில் வேலை பார்த்தபோது வேறு ஒருவருடன் ஏற்பட்ட பழக்கத்தைத் திருமணத்திற்குப் பிறகும் அவர் தொடர்ந்ததை கணவர் கண்டித்ததால், இந்த கொலையைச் செய்ததாக அவர் வாக்குமூலம் அளித்துள்ளார். இதனையடுத்து, இந்த மரண வழக்கை கொலை வழக்காக மாற்றிய காவல்துறையினர், சரண்யாவை கைது செய்து திருச்சி பெண்கள் சிறையில் அடைத்தனர்.
