கர்நாடக மாநிலம் பாகல்கோட்டை மாவட்டத்தில் ஒரு பெண் மற்றும் வாலிபரை 10 பேர் கொண்ட கும்பல் கடத்தி மரக்கட்டையால் கொடூரமாக தாக்கிய வீடியோ வெளியாகி பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில் பெண்ணையும் வாலிபரையும் மரக்கட்டையால் அவர்கள் கொடூரமாக தாக்குகின்றனர். இருவரும் வலி தாங்க முடியாமல் அய்யோ அம்மா என்று கதறுகின்றனர். இருந்தாலும் ஈவு இரக்கமில்லாமல் அவர்களை விடாமல் கொடூரமாக தாக்கும் காட்சிகள் வீடியோவில் பதிவாகியுள்ளது. இதனைப் பார்த்த பலரும் கொடூர தாக்குதலை பார்த்து பதறிப் போனார்கள். சம்பந்தப்பட்டவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்ட நிலையில் உடனே இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர்.
அந்த விசாரணையில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்தது. அதாவது பாகல் கோட்டை பகுதியை சேர்ந்த யங்கப்பா சூரி (45) என்பவருடைய மனைவி போரவவ்வா(40). சூரி சொந்தமாக சரக்கு வாகனம் வைத்துள்ள நிலையில் அதன் டிரைவராக பிரகாஷ் (25) என்பவர் பணியாற்றி வந்துள்ளார். இதனால் அடிக்கடி பிரகாஷ் தனது முதலாளி சூரி வீட்டுக்கு சென்று வந்த போது சூரியின் மனைவி பிரகாஷிடம் சிரித்து பேசியுள்ளார். அடிக்கடி இருவரும் பேசி வந்ததால் இருவரின் நடத்தையிலும் சூரிக்கு சந்தேகம் வந்துள்ளது.
இதனால் தன் மனைவியிடம் அவர் தகராறு செய்துள்ளார். இந்நிலையில் சூரி தனது கூட்டாளிகள் ஒன்பது பேருடன் சேர்ந்து மனைவி மற்றும் டிரைவர் பிரகாஷ் ஆகியோரை ஒரு காரில் கடத்தி ஊருக்கு வெளிப்புறமான காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்று இருவரின் கை கால்களை கட்டி போட்டு மரக்கட்டையால் கொடூரமாக தாக்கியுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசில் புகார் அளிக்கப்பட்ட நிலையில் போலீசார் வழக்கு பதிவு செய்து 10 பேரையும் கைது செய்துள்ளனர். இது தொடர்பான வீடியோ தற்போது வெளியாகி பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
