பெங்களூருவில் மென்பொறியாளர் தம்பதியினர் அடுத்தடுத்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானாவின் சித்திபேட்டையைச் சேர்ந்த 32 வயதான பானு சந்தர் ரெட்டி குந்தா, பெங்களூருவில் உள்ள தனது குடியிருப்பில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். நீண்ட நேரமாகியும் அவர் கதவைத் திறக்காததால் சந்தேகமடைந்த அவரது மனைவி பிபி ஷாஜியா சிராஜ், அக்கம் பக்கத்தினர் மற்றும் பாதுகாப்பு ஊழியர்களின் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளார். அப்போது தனது கணவர் சடலமாகத் தொங்குவதைக் கண்டு அவர் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளார்.
கணவரின் மரணத்தைத் தாங்கிக்கொள்ள முடியாத ஷாஜியா, அடுத்த சில நிமிடங்களிலேயே குடியிருப்பின் 17-வது மாடியிலிருந்து கீழே குதித்து தனது உயிரை மாய்த்துக்கொண்டார். 31 வயதான ஷாஜியா ஐபிஎம் (IBM) நிறுவனத்தில் பணியாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்ததாகக் கருதப்பட்ட இந்தத் தம்பதியினரின் திடீர் முடிவு, அவர்களது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பாகத் தகவல் அறிந்த போலீசார், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் அளித்த புகாரின் அடிப்படையில் இரண்டு தனித்தனி வழக்குகளைப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தம்பதியினருக்கு இடையே ஏதேனும் கருத்து வேறுபாடுகள் இருந்ததா, வேலையில் மன அழுத்தம் காரணமாக இந்த முடிவை எடுத்தார்களா அல்லது ஏதேனும் உடல்நலக் குறைபாடுகள் இருந்ததா எனப் பல்வேறு கோணங்களில் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். தற்கொலை செய்துகொள்வதற்கு முன்பாக அவர்கள் ஏதேனும் கடிதம் எழுதி வைத்துள்ளார்களா என்பது குறித்தும் தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.
