உத்தரப் பிரதேச மாநிலம் உன்னாவ் பகுதியில் கணவரைக் கொலை செய்து சடலத்தைப் பெட்டிக்குள் அடைத்து நெடுஞ்சாலையோரத்தில் வீசிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அச்சல்கஞ்ச் பகுதியைச் சேர்ந்த சோனு என்பவர், தனது மனைவி நேஹாவுடன் கஞ்சன் நகரில் வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில், உன்னாவ் – ரேபரேலி நெடுஞ்சாலையோரத்தில் பெட்டிக்குள் அடைக்கப்பட்ட நிலையில் சோனுவின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.
இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், தீவிர விசாரணையில் இறங்கினர். அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, அந்தப் பெட்டியைக் கொண்டு செல்லப் பயன்படுத்தப்பட்ட வாகனத்தைக் கண்டறிந்தனர். அந்த வாகனம் பெட்டியுடன் சென்றுவிட்டு, பெட்டியின்றித் திரும்பியது விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து வாகனத்தின் பதிவு எண்ணைக் கொண்டு உரிமையாளர் மற்றும் ஓட்டுநரைக் கண்டுபிடித்த காவல்துறையினர், சந்தேக நபர்களை வெற்றிகரமாக அடையாளம் கண்டனர். இப்படுகொலை தொடர்பாக, கொல்லப்பட்ட சோனுவின் மனைவி நேஹா, பக்கத்து வீட்டுக்காரர் ராகுல் மற்றும் தௌஃபிக் உள்ளிட்ட நான்கு பேரை காவல்துறையினர் 12 மணி நேரத்திற்குள் கைது செய்தனர்; இவர்களில் ஒருவர் சிறுவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
காவல்துறையினரின் விசாரணையின்போது, சோனு அடிக்கடி மது அருந்திவிட்டு வந்து மனைவியைத் தாக்கியதாகவும், பல பெண்களை வீட்டிற்கு அழைத்து வந்ததாகவும் கூறப்படுகிறது. கடந்த அக்டோபர் 19-ம் தேதி சோனு தன்னைத் தாக்கியதாக நேஹா காவல்துறையில் புகார் அளித்திருந்த நிலையில், அன்றைய தினம் இரவு பக்கத்து வீட்டுக்காரரான ராகுலுடன் மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில் சோனு கொல்லப்பட்டுள்ளார்.
தொடர்ந்து, ராகுல் சோனுவின் கழுத்தை நெரித்துக் கொன்றதாகவும், பின்னர் சடலத்தை மறைப்பதற்காக இரும்புப் பெட்டி மற்றும் வாகனத்தை ஏற்பாடு செய்ததாகவும் நேஹா வாக்குமூலம் அளித்துள்ளார். இதற்கிடையில், கொலையில் தனக்குத் தொடர்பு இல்லை என்றும், வாகனத்தை ஏற்பாடு செய்து தந்தது மட்டுமே தனது பணி என்றும் ராகுல் மறுத்துள்ளார். ஐந்து தனிப்படை காவல் குழுக்கள் மூலம் இக்கொலை வழக்கு தொடர்பான தீவிர விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
