உத்தரபிரதேசம் பரேலி மாவட்டத்தின் தேவ்சரா சந்திப்பில், கள்ளத்தொடர்பில் இருந்ததாகக் கூறப்படும் சாதனா என்ற பெண்ணுடன் தனது கணவர் நேத்ரபால் சிங் காரில் செல்வதை கோதாவரி (38) என்ற பெண் கண்டார். காரை நிறுத்த முயன்றபோது, அவரது கணவர் காரை நிறுத்தாமல் ஓட்டியதால், கோதாவரி காரின் முன்பக்கத்தை பிடித்துத் தொங்கியவாறே சுமார் 100 மீட்டர் தூரம் இழுத்துச் செல்லப்பட்டார். இறுதியில் அங்கிருந்த பொது மக்கள் காரை வழிமறித்து கோதாவரியை மீட்டனர். இந்தச் சம்பவத்தின்போது அவர் காயமடைந்தார், இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகிப் பரவி வருகிறது.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட கோதாவரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதில், கணவரின் கள்ளக்காதலி சாதனா தன்னைத் தாக்கி, தனது தங்கச் சங்கிலியைப் பறித்துக்கொண்டு தப்பியதாகக் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஆனால் இந்தத் குற்றச்சாட்டுகளை மறுத்த சாதனா, தான் வட்டார அலுவலகத்திலிருந்து திரும்பும்போது நேத்ரபாலிடம் லிஃப்ட் மட்டுமே கேட்டதாகவும், கோதாவரிதான் தன்னைத் தவறாகப் புரிந்துகொண்டு தாக்கியதாகவும் கூறியுள்ளார். இச்சம்பவம் குறித்து பாமோரா காவல் நிலைய ஆய்வாளர் பவன் குமார் கூறுகையில், கணவர் நேத்ரபால் மற்றும் சாதனா ஆகிய இருவர் மீதும் கொலை முயற்சி, அஜாக்கிரதையாக வாகனம் ஓட்டுதல், தாக்குதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் எஃப்ஐஆர் (பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
