உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் கள்ளக்காதல் விவகாரத்தில் ஏற்பட்ட தகராறில், மனைவி தன் கணவனைக் கத்தியால் குத்திய கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. கான்பூரின் பீல்கானா பகுதியைச் சேர்ந்த மனிஷ் குப்தா (45) என்ற மளிகைக் கடை தரகர், நிஹாரிகா காஷ்யப் என்ற பெண்ணை 8 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 6 வயதில் ஒரு மகன் உள்ளான். இந்நிலையில், கடந்த மூன்று ஆண்டுகளாக நிஹாரிகாவிற்கு சமூக வலைத்தளம் மூலம் ஜம்முவைச் சேர்ந்த ஒரு வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டு, அது கள்ளக்காதலாக மாறியுள்ளது.
கடந்த ஜூன் 5-ஆம் தேதி மதியம், நிஹாரிகா தனது கள்ளக்காதலனுடன் மொபைல் போனில் பேசிக் கொண்டிருந்தபோது, அதை மனிஷ் நேரில் பார்த்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த நிஹாரிகா, சமையலறையில் இருந்த கத்தியை எடுத்து மனிஷின் வயிற்றில் பலமுறை குத்தியுள்ளார். படுகாயமடைந்த மனிஷை அவரது குடும்பத்தினர் மீட்டு உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த அவர், 11 நாட்களுக்குப் பிறகு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
மனிஷ் மருத்துவமனையில் சுயநினைவு பெற்றபோது, நிஹாரிகா தன்னை கத்தியால் குத்திய சமயத்தில் அவளது கள்ளக்காதலனும் போன் அழைப்பில் இருந்ததாகத் தனது தந்தையிடம் தெரிவித்துள்ளார். மனிஷ் அலறிய சத்தத்தைக் கேட்டும், அந்த வாலிபர் போனில் நிஹாரிகாவைத் தூண்டிவிட்டு, கணவனைத் தீர்த்துக்கட்டுமாறு கூறியதாக மனிஷின் தந்தை குற்றம் சாட்டியுள்ளார். தற்போது, உயிரிழந்த மனிஷின் தந்தையின் புகாரின் பேரில் போலீசார் குற்றவாளியான மனைவி நிஹாரிகா மீது கொலை வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
