கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டம் அர்சிகெரே தாலுகா, பசவனஹட்டி கிராமத்தைச் சேர்ந்த விவசாயியான 34 வயது மோகன் என்பவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில், அவரது மனைவி உட்பட 4 பேரை காண்ட்ஸி காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இரண்டு ஏக்கர் நிலத்தில் இஞ்சி விவசாயம் செய்து வந்த மோகனுக்கும் ஜெயலட்சுமிக்கும் திருமணமாகி 8 ஆண்டுகள் ஆகும் நிலையில், இரு குழந்தைகள் உள்ளனர். ஜெயலட்சுமிக்கும் தனஞ்சயமூர்த்தி என்பவருக்கும் இடையே தவறான தொடர்பு இருந்ததாகக் கூறப்படுகிறது. இதனை மோகன் கண்டித்ததால், ஆத்திரமடைந்த ஜெயலட்சுமி கணவரைக் கொலை செய்யத் திட்டமிட்டுள்ளார்.
கணவனைக் கூலிப்படை ஏவிக்கொலை செய்யத் திட்டமிட்ட ஜெயலட்சுமி, தனஞ்சயமூர்த்தி, ஜெகதீஷ் மற்றும் புட்டராஜு ஆகியோரை அணுகி ரூ.1 லட்சம் தருவதாக பேரம் பேசியுள்ளார். செப்டம்பர் 2 அன்று மேற்கொள்ளப்பட்ட முதல் கொலை முயற்சி, மோகனுடன் அவரது நண்பர்கள் இருந்ததால் தோல்வியில் முடிந்தது. தொடர்ந்து செப்டம்பர் 4 ஆம் தேதி இரவு, மோகன் வயலுக்கு நீர் பாய்ச்சச் சென்றபோது, ஜெயலட்சுமி அவரது இருப்பிடத்தை தனஞ்சயமூர்த்திக்குத் தெரிவித்துள்ளார். திட்டமிட்டபடி ஜெகதீஷ் மோகனுடன் பேச்சுக் கொடுத்துக்கொண்டிருக்க, தனஞ்சயமூர்த்தி இரும்புக் கம்பியால் பின்னாலிருந்து மோகனைத் தாக்கி கொடூரமாகக் கொலை செய்துள்ளார்.
கொலை முடிந்ததும் ஜெயலட்சுமி முன்பணமாக ரூ.10,000 அனுப்பியதும், காவல் துறையிடம் எதுவுமே தெரியாதது போல நாடகமாடியதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இருப்பினும், சந்தேகத்தின் பேரில் ஜெயலட்சுமியின் கைபேசி அழைப்புப் பதிவுகள் (Call Records) மற்றும் பிற தடயங்களை ஆய்வு செய்த காண்ட்ஸி காவல்துறையினர், கொலைச் சதியை அம்பலப்படுத்தினர். இந்த கொடூரச் சம்பவத்தில் ஈடுபட்ட ஜெயலட்சுமி, தனஞ்சயமூர்த்தி, ஜெகதீஷ் மற்றும் புட்டராஜு ஆகிய 4 பேரையும் காவல்துறையினர் தற்போது கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
