விஜய் தொலைக்காட்சியின் சூப்பர் ஹிட் நிகழ்ச்சியான ‘நீயா நானா’வில் இந்த வாரம், சமூகத்தில் தற்போதைய ட்ரெண்டாக மாறிவரும் “கணவரை விட அதிக வயதுடைய மனைவி மற்றும் மனைவியை விட வயதில் இளைய கணவர்” என்ற சுவாரசியமான தலைப்பில் விவாதம் நடைபெற உள்ளது. பொதுவாக, குடும்பத்தை பக்குவமாக வழிநடத்த கணவனுக்கு வயது அதிகமாக இருக்க வேண்டும் என்பதே நமது முன்னோர்களின் கருத்தாக இருந்தது. ஆனால், இந்த பழமையான சிந்தனையை உடைத்து, தற்காலத்தில் தங்களை விட வயது குறைந்த ஆண்களை காதலித்து திருமணம் செய்து கொள்ளும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதை இந்த வாரம் கோபிநாத் தன் பாணியில் அலசுகிறார்.
இந்த விவாதத்தில் பங்கேற்ற தம்பதியினரின் கருத்துக்களும், அவர்கள் பகிர்ந்துகொண்ட சுவாரசியமான சம்பவங்களும் அரங்கத்தையே அதிரவைத்துள்ளன. தங்களை விட குறைந்த வயதுடைய ஆண்களைத் திருமணம் செய்த மனைவிகள் தங்களின் அனுபவங்களை நகைச்சுவையோடு விவரிக்கின்றனர். அதே சமயம், தங்களை விட வயது மூத்த பெண்களைக் கரம்பிடித்த கணவர்கள், தங்களை மனைவிகள் எப்போதும் ‘சின்னப் பையன்’ போல நடத்தி மட்டம் தட்டுவதாக தங்கள் பக்கத்து குமுறல்களையும் பரிதாபமாக முன்வைக்கின்றனர்.
நிகழ்ச்சியின் சுவாரசியத்தை அதிகரிக்கும் வகையில், பல சுவாரசியமான சம்பவங்களும் இந்த வார எபிசோடில் அரங்கேறியுள்ளன. அதில் ஒரு இளைஞர், தன் மனைவியின் வயதை விட தன் வயது குறைவு என்பது மற்றவர்களுக்கு தெரிந்துவிடக் கூடாது என்பதற்காக, தன் ஆபீஸ் ஐடி கார்டை கூட அணியாமல் வந்ததாகக் கூறி அனைவரையும் சிரிக்க வைத்தார். மற்றொருபுறம், சவாலாகப் பேசிய பெண் ஒருவர், தன் கணவர் குடும்பத்தில் உள்ளவர்களின் உறவுமுறைகளை அவர் சரியாகக் கூறிவிட்டால், தான் அரங்கத்திலேயே மொட்டையடித்துக் கொள்வதாகக் கூறி விவாதத்தின் பரபரப்பைக் கூட்டியுள்ளார்.
