டெல்லியின் சங்கம் விஹார் பகுதியைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் தரகரான முன்னாலால் என்பவர், கடந்த 10-ஆம் தேதியன்று ரத்த வெள்ளத்தில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். அதிகாலையில் தகவல் அறிந்து வந்த போலீசார், அவரது உடலை மீட்டு எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் உறுதிப்படுத்தினர். இச்சம்பவம் குறித்து முன்னாலாலின் மனைவி நசியாவிடம் விசாரணை மேற்கொண்டபோது, இரவில் வீட்டிற்குள் நுழைந்த திருடர்களிடம் போராடியதாலேயே தனது கணவர் கொல்லப்பட்டதாகவும், அந்த நேரத்தில் தான் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்ததாகவும் போலீசாரிடம் நாடகமாடியுள்ளார்.
அவரது பேச்சில் முரண்பாடுகள் இருந்ததால் சந்தேகம் அடைந்த காவல்துறையினர், வீட்டை தீவிரமாக சோதனை செய்தபோது ரத்தக்கறைகள் திட்டமிட்டு அழிக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து நசியாவிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தியதில் உண்மைகள் வெளிவந்தன. நசியாவிற்கும் வீட்டின் அருகே பணிபுரியும் சமன் என்பவருக்கும் இடையே கள்ளக்காதல் இருந்துள்ளது. இந்த உறவுக்கு இடையூறாக இருந்த கணவனை ஒழித்துக்கட்ட முடிவு செய்த நசியா, 5 லட்சம் ரூபாய் தருவதாக சமனிடம் பேரம் பேசி 20 ஆயிரம் ரூபாயை முன்பணமாகக் கொடுத்து தனது கணவரை கூலிப்படை ஏவி கொலை செய்யத் திட்டமிட்டுள்ளார்.
திட்டமிட்டபடி, காதலன் சமன் கொடுத்தனுப்பிய மயக்க மருந்தை கணவர் குடிக்கும் தண்ணீரில் நசியா கலந்து கொடுத்துள்ளார். முன்னாலால் மயக்கமடைந்ததும், வீட்டிற்குள் நுழைந்த சமன் மற்றும் அவனது கூட்டாளி கிஷன் ஆகியோர் இணைந்து அவரை கயிற்றால் கழுத்தை நெரித்தும், மர்ம உறுப்பில் மின்சாரம் பாய்ச்சியும், மரக்கட்டையால் அடித்தும் கொடூரமாக கொலை செய்துள்ளனர். தன்னிடம் போதிய பணம் இருந்தும் அதைத் தராமல் அடிக்கடி அடித்து துன்புறுத்தியதாலேயே, தனது காதலனுடன் சேர்ந்து இந்த கொலையை அரங்கேற்றியதாக துணை காவல் ஆணையர் மித்தல் தெரிவித்துள்ளார்.
