சமூக வலைத்தளங்களின் அதீதப் பயன்பாடும், அதனால் ஏற்படும் தவறான தொடர்புகளும் எவ்வாறு ஒரு அழகான குடும்பத்தை நடுத்தெருவில் நிறுத்துகின்றன என்பதற்குத் தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் நடந்துள்ள இந்தச் சம்பவம் மற்றுமொரு சான்றாக அமைந்து, ஒட்டுமொத்த தமிழகத்தையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பட்டுக்கோட்டை மயில் பாளையம் பகுதியைச் சேர்ந்த தர்மராஜ் – அட்சயா தம்பதியினரின் ஐந்து ஆண்டுக்காலத் திருமண வாழ்க்கையும், அவர்களின் ஐந்து வயதுக் குழந்தையின் எதிர்காலமும் ஒரு தவறான நட்பால் இன்று கேள்விக்குறியாகியுள்ளது.
கணவன் தர்மராஜ் வீட்டில் இல்லாத நேரங்களில், அட்சயா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிக நேரத்தைச் செலவிட்டு வந்துள்ளார். இதன் மூலம் திருச்சியைச் சேர்ந்த ஜோஸ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு, அது நாளடைவில் தவறான உறவாக மாறியுள்ளது. இதனை அறிந்து கணவன் பலமுறை எச்சரித்தும், அட்சயா தன் போக்கை மாற்றிக்கொள்ளவில்லை. ஒருகட்டத்தில் மனைவியும் ஜோசும் வீட்டில் ஒன்றாக இருந்ததை தர்மராஜ் கையும் களவுமாகப் பிடித்து வீடியோவாகப் பதிவு செய்துள்ளார். இதனால் ஏற்பட்ட மனக்கசப்பால் கடந்த ஓராண்டாகப் பிரிந்திருந்த தம்பதியினர், குழந்தையின் எதிர்காலத்தைக் கருத்தில்கொண்டு கடந்த சில நாட்களுக்கு முன்புதான் பட்டுக்கோட்டையில் மீண்டும் ஒன்றாக வாழத் தொடங்கியுள்ளனர்.
ஆனால், மீண்டும் அந்த வீட்டிற்கு ஜோஸ் வந்ததைக் கண்ட தர்மராஜ், பெரும் ஆத்திரமடைந்துள்ளார். வார்த்தை தடிப் முற்றி, கோபத்தின் எல்லைக்குச் சென்ற அவர், தன் மனைவி என்றும் பாராமல் கத்தியால் அட்சயா வின் முகம் மற்றும் கழுத்துப் பகுதிகளில் சரமாரியாக வெட்டியுள்ளார். பின்னர் தன் ஐந்து வயது மகனுடன் அங்கிருந்து தப்பியோடிய தர்மராஜ், சமூக வலைத்தளங்களில் அடுத்தடுத்து வெளியிட்ட உருக்கமான வீடியோ பதிவுகள் பார்ப்போர் நெஞ்சைக் கலங்க வைப்பதாக இருந்தன.
தர்மராஜ் வெளியிட்ட வீடியோக்களில், “என்னை மன்னிச்சிடுடா தம்பி” என்று மகனிடம் அவர் கதறுவதும், அதற்கு அந்தப் பிஞ்சுச் சிறுவன் “எனக்குப் பயமா இருக்குப்பா” என்று அழுவதும் காண்போரைக் கண் கலங்கச் செய்தது. மேலும், “காவல்துறைக்கு வணக்கம், ஜோசுக்குத் தகுந்த தண்டனை வாங்கித் கொடுங்கள், இல்லாவிட்டால் இன்னொரு குடும்பமும் நாசமாகிவிடும்” என்றும், “நான் செத்துட்டா நீ நல்லா வளரணும், நான் உன் கூடவே இருப்பேன்” என்றும் தற்கொலை விளிம்பில் நின்று தர்மராஜ் பேசிய மரண வாக்குமூல வீடியோக்கள் இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.
இதற்கிடையே கழுத்து மற்றும் கன்னத்தில் பலத்த காயங்களுடன் அட்சயா பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தப்பியோடிய தர்மராஜையும் குழந்தையையும் தேடிவந்த தனிப்படை போலீசார், தஞ்சாவூர் அருகே வல்லம் பகுதியில் வைத்து குழந்தையைப் பத்திரமாக மீட்டனர். பின்னர் தர்மராஜையும் கைது செய்து பட்டுக்கோட்டை போலீசாரிடம் ஒப்படைத்தனர். இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்களின் தவறான சாட்டிங் கலாச்சாரமும், தடம் மாறும் உறவுகளும் பிஞ்சுக் குழந்தைகளைப் பாதிப்பதோடு, பல குடும்பங்களை எவ்வாறு சுக்குநூறாக உடைக்கின்றன என்பதற்கு இந்தச் சம்பவம் ஒரு கசப்பான எச்சரிக்கையாகும்.
