தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில், காதலனுடன் சேர்ந்து கணவரைக் கொலை செய்து, அவரது உடலை அண்டை மாநிலமான மகாராஷ்டிராவில் ரகசியமாகப் புதைத்த படுபாதகச் செயல் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கணவர் மாயமாகிவிட்டார் என்று போலீசில் நாடகமாடி, புகாரளித்த மனைவியே இந்தக் கொலையின் பின்னணியில் மூளையாகச் செயல்பட்டது தெரியவந்துள்ளதால், அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஹைதராபாத்தைச் சேர்ந்த பெண்டயா என்பவர் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் திடீரென மாயமானார். கணவரைக் காணவில்லை என்று அவரது மனைவி சத்யவதி, மியாபூர் காவல் நிலையத்தில் கண்ணீருடன் புகார் அளித்தார். போலீசாரும் வழக்குப் பதிவு செய்து தீவிரமாகத் தேடி வந்தனர். ஆனால், பல மாதங்களாகியும் பெண்டயா குறித்து எந்தவொரு துப்பும் கிடைக்காததால், போலீசார் தங்களது விசாரணையை நவீன தொழில்நுட்பப் பாதைக்கு மாற்றினர்.
சத்யவதியின் செல்போன் அழைப்புப் பதிவுகள் இருப்பிடத் தகவல்கள் மற்றும் அந்தப் பகுதிகளில் இருந்த சிசிடிவி காட்சிகளை போலீசார் முழுமையாக ஆய்வு செய்தனர். அப்போது, கணவர் காணாமல் போனதில் இருந்தே சத்யவதி ஒரு குறிப்பிட்ட நபருடன் தொடர்ந்து ரகசியமாகப் பேசி வந்தது தெரியவந்தது. அந்த நபர்தான் சத்யவதியின் காதலன் என்பதும், இருவரும் இணைந்து பெண்டயாவைத் தீர்த்துக்கட்டத் திட்டம் தீட்டியதும் போலீசாரின் கிடுக்கிப்பிடி விசாரணையில் அம்பலமானது.
கொலைக்குப் பின் உடலை மறைப்பதற்காக, காரில் ஏற்றிச் சென்று மகாராஷ்டிர மாநில எல்லைப் பகுதியில் ரகசியமாகப் புதைத்ததாக சத்யவதி ஒப்புக்கொண்டார். இதையடுத்து, நீதிமன்ற அனுமதியுடன் 8 மாதங்களுக்குப் பிறகு பெண்டயாவின் உடல் தோண்டி எடுக்கப்பட்டு, உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பப்பட்டது. தற்போது சத்யவதியை போலீசார் கைது செய்துள்ள நிலையில், தலைமறைவாக உள்ள அவரது காதலனைத் தேடி வருகின்றனர். எத்தனை மாதங்கள் மறைத்தாலும் தொழில்நுட்ப ஆதாரங்கள் மூலம் குற்றம் நிரூபிக்கப்படும் என்பதை இந்தச் சம்பவம் உணர்த்தியுள்ளது.
