“சாப்பாட்டில் விஷம் வச்சும் சாகலனு… தூங்கும்போது காதில் விஷம் ஊற்றிய மனைவி”… அதிகாலையில் அலறி அடித்துக்கொண்டு ஓடிய கணவன்…. அடுத்து வெளிவந்த திடுக்கிடும் உண்மை…!

By Nanthini on ஆடி 1, 2026

Spread the love

தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் அருகே உள்ள புழுதிக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (50). கூலித் தொழிலாளியான இவருக்கு உமாராணி என்ற மனைவியும், திருமணமான ஒரு மகளும், வெளிநாட்டில் வேலை செய்யும் ஒரு மகனும் உள்ளனர். பிள்ளைகள் இருவரும் வெளியில் வசித்து வருவதால், வீட்டில் கணவன்-மனைவி ஆகிய இருவரும் மட்டுமே தனியாக வாழ்ந்து வந்துள்ளனர். இந்த நிலையில், குடும்பத்திற்காக புதிதாக வீடு கட்டி வந்த ரவிச்சந்திரன், அதற்காகப் பல்வேறு நபர்களிடமும், தனியார் நிதி நிறுவனங்களிலும் தன் பெயரில் சுமார் 10 லட்சம் ரூபாய் வரை கடன் வாங்கியதாகக் கூறப்படுகிறது.

வாங்கப்பட்ட அனைத்துக் கடன்களும் ரவிச்சந்திரனின் பெயரிலேயே இருந்ததால், அந்தப் பணத்தைத் திருப்பிச் செலுத்த வேண்டிய பொறுப்பில் இருந்து தப்பிக்க உமாராணி ஒரு கொடூரமான முடிவை எடுத்தார். கணவரைக் கொலை செய்துவிட்டால் கடனை அடைக்க வேண்டியதில்லை எனத் திட்டமிட்ட அவர், தனது தம்பி ஞானசேகரனுடன் கூட்டுச் சேர்ந்தார். கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பே, ரவிச்சந்திரனின் உணவில் விஷம் கலந்து கொடுத்துக் கொலை செய்ய முயன்றனர். ஆனால், அதிர்ஷ்டவசமாக அந்த முயற்சியில் உயிர் தப்பிய ரவிச்சந்திரன், அதன் பிறகு வீட்டில் சாப்பிடுவதை முற்றிலுமாகத் தவிர்த்து வந்துள்ளார்.

   

முதல் முயற்சி தோல்வியடைந்த நிலையில், நேற்று இரவு வழக்கம் போல் வெளியிலேயே சாப்பிட்டுவிட்டு ரவிச்சந்திரன் வீட்டில் உறங்கியுள்ளார். இன்று அதிகாலை அவர் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தபோது, உமாராணியும் அவரது தம்பி ஞானசேகரனும் சேர்ந்து ரவிச்சந்திரனின் காதில் விஷத்தை ஊற்றியுள்ளனர். திடீரென காதில் ஏற்பட்ட கடுமையான எரிச்சலால் அலறித்துடித்து விழித்த ரவிச்சந்திரன், மனைவியைத் தள்ளிவிட்டு வீட்டை விட்டுத் தப்பியோடினார். விடியற்காலை இருட்டாக இருந்ததால், அருகில் இருந்த ஒரு கோயிலில் தஞ்சமடைந்து விடியும் வரை காத்திருந்தார்.

   

விடிந்த பிறகு, அந்த வழியாகச் சென்ற ஒருவரின் உதவியுடன் ரவிச்சந்திரன் கும்பகோணம் அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்துத் தகவலறிந்த திருவிடைமருதூர் போலீசார் மருத்துவமனைக்கு விரைந்து சென்று ரவிச்சந்திரனிடம் விசாரணை நடத்தி வழக்குப் பதிவு செய்தனர். தொடர்ந்து, தலைமறைவாக இருந்த மனைவி உமாராணி மற்றும் அவரது தம்பி ஞானசேகரன் ஆகிய இருவரையும் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 10 லட்சம் கடன் விவகாரத்தில் கணவரைக் கொல்ல முயன்ற இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.