உத்தரப்பிரதேச மாநிலம் ஜான்சியில், கணவன் இருக்கும்போதே கள்ளக்காதலனுடன் ஓட்டலில் தங்கியிருந்த மனைவியை, போலீசார் உதவியுடன் கணவர் கையும் களவுமாகப் பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜான்சியின் நவபாத் பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் தனது மனைவி கள்ளக்காதலனுடன் இருப்பதாக ரகசியத் தகவல் கிடைத்ததையடுத்து, கணவர் உடனடியாக போலீசாரின் அவசர உதவி எண்ணைத் தொடர்புகொண்டு புகார் அளித்தார். அதன்பின், போலீசாருடன் அந்த ஓட்டல் அறைக்குச் சென்று சோதனையிட்டார்.
போலீசார் கதவைத் தட்டியதும் உள்ளே இருந்த மனைவி அதிர்ச்சியடைந்தார். போலீசார் மற்றும் கணவர் உள்ளே நுழைந்தபோது, கள்ளக்காதலன் பயத்தில் கட்டிலுக்கு அடியில் சென்று பதுங்கிக் கொண்டார். சத்தமாக வாக்குவாதம் நடந்த நிலையில், அங்கிருந்தவர்கள் முன்னிலையில் கட்டிலுக்கு அடியில் மறைந்திருந்த காதலனை மனைவியே வெளியே இழுத்து வந்து காட்டினார். இந்தச் சம்பவத்தைக் கண்ட ஓட்டல் ஊழியர்களும் மற்ற பயணிகளும் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகினர்.
விசாரணையில், இந்த தம்பதிக்கு திருமணமாகி மூன்று ஆண்டுகள் ஆவதும், கடந்த ஒன்றரை ஆண்டுகளாகப் பிரிந்து வாழ்ந்து வருவதும் தெரியவந்தது. அப்போது பேசிய அந்தப் பெண், தனது கணவருடன் வாழ விருப்பமில்லை என்றும், அவர் ஒரு ‘முடிந்துபோன அத்தியாயம்’ என்றும் ஆக்ரோஷமாகக் கூறினார். மேலும், தான் தனது விருப்பப்படியே கள்ளக்காதலனுடன் வந்ததாகவும், விவாகரத்து பெறத் தயார் என்றும் போலீசாரிடம் திட்டவட்டமாகத் தெரிவித்தார். இது தொடர்பாகப் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
