தமிழகம் முழுவதும் 2026 சட்டசபை தேர்தல் குறித்து லயோலா கல்லூரி முன்னாள் மாணவர் அமைப்பு கருத்து கணிப்பு மேற்கொண்டுள்ளது. அதன் முடிவுகளை அந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் திருநாவுக்கரசு வெளியிட்டார். அதில், இந்திய அரசியல் ஜனநாயக யுக்திகள் சார்பாக 61 வது கள ஆய்வு நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இந்த கள ஆய்வில் வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு முதலமைச்சராக வரும் வாய்ப்பு யாருக்கு அதிகம் உள்ளது என்ற கேள்விக்கு 55 சதவீதம் பேர் முதல்வர் ஸ்டாலின் என்று கூறியுள்ளனர். இதில் இரண்டாவது இடத்தை விஜயும் மூன்றாவது இடத்தை எடப்பாடி பழனிச்சாமியும் பெற்றுள்ளனர்.
நடிகர் விஜயின் அரசியல் வருகையால் திமுகவுக்கு அதிகம் பாதிப்பு என்றும் அடுத்து விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் அதிமுகவுக்கு பாதிப்பு ஏற்படும் எனவும் தெரிவித்துள்ளனர். ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு இபிஎஸ் அதிமுக தலைமை பொறுப்பேற்ற நிலையில் கட்சி வளர்ச்சி அடையவில்லை என 60% பேர் கூறியுள்ளனர். விஜயின் அரசியல் நிலைப்பாடு சரியில்லை என 53 சதவீதம் பெயரும் நன்றாக உள்ளதாக 22 சதவீதம் பேரும் கூறியுள்ளனர். இளம் வாக்காளர்களை கவர்வதில் விஜய் முதலிடம் பிடித்துள்ளார்.
அடுத்ததாக அண்ணாமலைக்கு இரண்டாவது இடம் கிடைத்துள்ளது. எம்ஜிஆருக்கு நிகரான தலைவராக விஜயை மக்கள் பார்க்கிறார்களா என்ற கேள்விக்கு இல்லை என்று 50% பேர் கருத்து தெரிவித்துள்ளனர். சீமான் வருகின்ற தேர்தலில் எம்எல்ஏவாக வேண்டும் என 69 சதவீதம் பேர் கூறியுள்ளனர். தமிழக வெற்றிக்கழகம் வலுவான கூட்டணியை அமைத்தால் இரண்டாவது இடத்தை பிடிக்கும். அதிமுக இரண்டாவது இடத்தை பிடிக்க கடுமையாக போராடும். திமுக 30.62 சதவீத வாக்குகளை பெற்று ஆட்சி அமைக்க வாய்ப்பு உள்ளது. அதிமுக கூட்டணி 26.39 சதவீத வாக்குகளும், தமிழக வெற்றிக்கழகம் 21.07 சதவீத வாக்குகளும் பெறும். இறுதியாக நாம் தமிழர் கட்சிக்கு 7.50 சதவீதம் வாக்குகள் கிடைக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.
