“ஜெயலலிதா To விஜய்!”… தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை அதிகம் குறைத்தது யார்?… ஒரு மெகா அலசல்…!!

By Muthu Mani on வைகாசி 13, 2026

Spread the love

தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தின் (டாஸ்மாக்) கீழ் தற்போது 4,765 மதுபானக் கடைகள் இயங்கி வரும் நிலையில், மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதிகளில் உள்ள கடைகளை அகற்ற முதலமைச்சர் விஜய் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். குறிப்பாக வழிபாட்டுத் தலங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பேருந்து நிலையங்களுக்கு அருகில் 500 மீட்டர் சுற்றளவில் அமைந்துள்ள கடைகளை ஆய்வு செய்து மூடுமாறு அவர் அறிவுறுத்தியுள்ளார். இந்த உத்தரவின் அடிப்படையில் மாநிலம் முழுவதும் ஆய்வு செய்யப்பட்டு, விதிமீறலாக இருந்த கடைகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

அதன்படி, வழிபாட்டுத் தலங்களுக்கு அருகில் உள்ள 276 கடைகள், பள்ளிகளுக்கு அருகில் உள்ள 186 கடைகள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகே உள்ள 255 கடைகள் என மொத்தம் 717 டாஸ்மாக் கடைகளை அடுத்த இரண்டு வாரங்களுக்குள் மூட அரசு உத்தரவிட்டுள்ளது. இதன் முதற்கட்டமாக சென்னையில் 10 கடைகளும், கோவையில் 4 கடைகளும் உடனடியாக மூடப்பட்டன. அரசின் இந்த நடவடிக்கையைத் தொடர்ந்து புதுக்கோட்டை, தர்மபுரி மற்றும் கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களிலும் பல கடைகள் இழுத்து மூடப்பட்டதால் பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

   

தமிழ்நாட்டின் டாஸ்மாக் வரலாற்றைப் பின்னோக்கிப் பார்த்தால், கடந்த 10 ஆண்டுகளில் படிப்படியாகக் கடைகளின் எண்ணிக்கை குறைந்து வருவதைக் காண முடிகிறது. 2011-ல் சுமார் 6,800 கடைகள் இருந்த நிலையில், 2016-ல் ஜெயலலிதா 500 கடைகளையும், 2017-ல் எடப்பாடி பழனிசாமி 500 கடைகளையும் மூடினர். மேலும், உச்ச நீதிமன்ற உத்தரவின்படி நெடுஞ்சாலைகளில் இருந்த சுமார் 2,000 கடைகள் அகற்றப்பட்டன. தொடர்ந்து 2023-ல் மு.க.ஸ்டாலின் 500 கடைகளை மூடினார்.

   

தற்போது முதலமைச்சர் விஜய் ஒரே நேரத்தில் 717 கடைகளை மூட உத்தரவிட்டுள்ளதன் மூலம், தமிழ்நாட்டில் டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கை 4,048-ஆகக் குறைந்துள்ளது. அதாவது கடந்த 10 ஆண்டுகளில் சுமார் 2,700-க்கும் மேற்பட்ட மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளன. குறிப்பாகக் கல்வி நிலையங்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்களுக்கு அருகே இருந்த கடைகள் அகற்றப்பட்டது சமூக ஆர்வலர்கள் மற்றும் பெண்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.