மகாராஷ்டிர மாநிலம் கல்யாண் பகுதியைச் சேர்ந்த கோமல் கெய்க்வாட் என்ற தாயின் மனவுறுதி மிக்கப் போராட்டம் இன்று சமூக வலைதளங்களில் பலருக்கும் ஊக்கமளித்து வருகிறது. 10-ஆம் வகுப்பிற்குப் பிறகு குடும்பச் சூழலால் படிப்பைத் தொடர முடியாமல் திருமண வாழ்க்கையில் இணைந்த கோமலுக்கு, கணவரால் கைவிடப்பட்ட நிலையில் தனது ஒன்றரை வயதுப் பெண் குழந்தையைப் பராமரிக்க வேண்டிய பெரும் பொறுப்பு ஏற்பட்டது.
மேலும் ஒரு பாதுகாப்புப் பணியாளராகத் தனது வாழ்க்கையைத் தொடங்கியவர், கைக்குழந்தையைத் தனியாக விட்டுச் செல்ல முடியாத காரணத்தால், துணிச்சலுடன் ஆட்டோ ஓட்டும் தொழிலைத் தேர்ந்தெடுத்தார். தனது மகளுக்காக ஆட்டோவிலேயே ஒரு சிறிய இருக்கையை அமைத்து, அவளையும் தன்னுடன் அழைத்துச் சென்றபடி வீதிகளில் ஆட்டோ ஓட்டி வரும் கோமலின் இந்த அர்ப்பணிப்பு பலரையும் நெகிழச் செய்துள்ளது.
View this post on Instagram
“>
தற்போது இன்ஸ்டாகிராமில் 66 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பின்தொடர்பாளர்களைக் கொண்டுள்ள கோமல், தனது உழைப்பின் மூலம் சிறுகச் சிறுகப் பணம் சேர்த்துச் சொந்தமாக ஒரு ஆட்டோவையும் வாங்கியுள்ளார். தான் இழந்த கல்வி அறிவைத் தனது மகளுக்குக் கிடைக்கச் செய்ய வேண்டும் என்பதையே லட்சியமாகக் கொண்டுள்ள அவர், மகளை ஒரு சிறந்த ஆங்கில வழிக் கல்வியில் பயிற்றுவிக்கப் பாடுபட்டு வருகிறார்.
இந்நிலையில் “ஒரு தாய் தனது குழந்தையின் எதிர்காலத்திற்காக எதையும் செய்வாள்” என்பதற்கு இலக்கணமாகத் திகழும் கோமல் கெய்க்வாட், தடைகளைத் தகர்த்து முன்னேறத் துடிக்கும் ஒவ்வொரு பெண்ணுக்கும் ஒரு சிறந்த முன்னுதாரணமாக விளங்குகிறார்.
