தமிழக வெற்றிக் கழகத்தின் அமைச்சரவை விரிவாக்கம் குறித்த எதிர்பார்ப்புகள் தற்பொழுது அரசியல் களத்தில் அதிகரித்துள்ளன. முதலமைச்சர் விஜய் தலைமையிலான அமைச்சரவையில் தற்போது 9 அமைச்சர்கள் மட்டுமே உள்ள நிலையில், ஆளுநரின் சென்னை வருகையைத் தொடர்ந்து நாளை புதிய அமைச்சர்கள் பதவியேற்பார்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே இருந்த அமைச்சரவையில் மக்கள் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் மிகக் குறைவாகவே இருந்ததால், கட்சிக்காக உழைத்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில், மக்கள் இயக்கப் பின்னணி கொண்டவர்களுக்கு முக்கிய இடங்கள் ஒதுக்கப்பட வாய்ப்புள்ளது.
அமைச்சரவைக்கான போட்டியில் பல்வேறு தரப்பினரும் முனைப்பு காட்டி வருகின்றனர். இஸ்லாமியர் பிரதிநிதித்துவத்தை உறுதி செய்ய அறந்தாங்கி பர்வேஸ் பெயர் முன்னணியில் உள்ளது. அதேபோல, பெண்களுக்கான இட ஒதுக்கீட்டில் எளிய பின்னணியைக் கொண்ட அவிநாசி கமலி அல்லது கட்சியின் மூத்த நிர்வாகிகளின் ஆதரவுடன் விஜயலெட்சுமி, தாஹிரா, காமாட்சி உள்ளிட்டோர் பரிசீலிக்கப்படுகின்றனர். கொங்கு மண்டல அரசியல் சமன்பாடுகளைக் கருத்தில் கொண்டு, செங்கோட்டையனின் பரிந்துரைகளும் முக்கியமாகக் கருதப்படுகிறது.
சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கு ஏற்கனவே அதிக பிரதிநிதித்துவம் கிடைத்துள்ளதால், இம்முறை ஆர்.கே.நகர் மரிய வில்சன் தவிர மற்றவர்களுக்கு வாய்ப்பு கிடைப்பது கடினம் என்றே தெரிகிறது. தென் மாவட்டங்களுக்கான பிரதிநிதித்துவத்தை உறுதி செய்ய கம்பம் ஜெகன்நாத் மிஸ்ரா, ஆர்.எஸ்.முருகன், நாராயணன் ஆகியோரிடையே கடும் போட்டி நிலவுகிறது. இருப்பினும், முதலமைச்சர் விஜய்யின் தனிப்பட்ட விருப்பத்தின் அடிப்படையில் அவரது நெருங்கிய நண்பர் ஸ்ரீநாத் அமைச்சரவையில் இடம்பெறுவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டதால், இது மற்றவர்களின் வாய்ப்புகளைச் சுருக்கும் சூழல் உருவாகியுள்ளது.
கூட்டணிக் கட்சிகளுக்கான ஒதுக்கீட்டைப் பொறுத்தவரை, காங்கிரஸ் கட்சிக்கு இரண்டு இடங்களும், விசிக மற்றும் ஐ.யூ.எம்.எல் கட்சிகளுக்கு தலா ஒரு இடமும் என மொத்தம் நான்கு இடங்கள் வழங்கப்படவிருக்கின்றன. புதிய விரிவாக்கத்தின் மூலம் மொத்தம் 24-25 அமைச்சர்களைக் கொண்ட அமைச்சரவையை அமைக்க முதலமைச்சர் திட்டமிட்டுள்ளார். இந்த எண்ணிக்கையைத் தாண்டி அமைச்சரவையை விரிவுபடுத்தாமல், ஏற்கனவே பொறுப்பில் உள்ள அமைச்சர்களுக்கே கூடுதல் துறைகளை ஒதுக்கிப் பணிகளைப் பகிர்ந்து கொள்ளவும் தவெக தலைமை ஆலோசித்து வருகிறது.
