சமூக வலைதளங்களில் பிரபலமடைவதற்காகப் பயணிகள் பயணித்துக் கொண்டிருக்கும்போதே, பேருந்து ஓட்டுநர் ஒருவர் ஓடும் பேருந்திலிருந்து கீழே இறங்கி நடனமாடி ரீல்ஸ் எடுத்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்த வீடியோ பொதுமக்களின் சாலைப் பாதுகாப்பு குறித்த பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளதுடன், இணையப் பிரபலத்திற்காகப் பொதுமக்களின் உயிரைப் பணயம் வைக்கும் போக்கிற்குப் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
எக்ஸ் தளத்தில் இந்த வீடியோவைப் பகிர்ந்த பயனர் ஒருவர், ஓடும் பேருந்திற்குள் பயணிகள் அமர்ந்திருக்க ஓட்டுநர் வெளியே இறங்கி ரீல்ஸ் எடுப்பதையும், பயணிகள் அதைப் பற்றிக் கவலைப்படாமல் இருப்பதையும் சுட்டிக்காட்டி விமர்சித்துள்ளார். மேலும், இத்தகைய ஆபத்தான சமூக வலைதளச் செயல்களால் விபத்துகள் ஏற்பட்டால், இறுதியில் அரசாங்கமே குற்றம் சாட்டப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
