தமிழக அரசின் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் தகுதியுள்ள பெண்களுக்கு வழங்கப்பட்டு வரும் ஆயிரம் ரூபாய் உதவித்தொகையை, வரும் காலங்களில் இரண்டாயிரம் ரூபாயாக உயர்த்தவும், இத்திட்டத்தில் உள்ள கடுமையான தகுதி கட்டுப்பாடுகளைத் தளர்த்தவும் திமுக அரசு திட்டமிட்டுள்ளது. தற்போது நடைமுறையில் உள்ள ஆண்டு வருமான உச்சவரம்பு, மின்சாரப் பயன்பாட்டு அளவு மற்றும் நில உடைமை போன்ற விதிகள் பல பெண்களை இத்திட்டத்தின் பயனைப் பெறுவதிலிருந்து தடுத்து வருகின்றன.
இந்த ‘செக்போஸ்ட்டுகளை’ அகற்றுவதன் மூலம், தற்போது விடுபட்டுள்ள நடுத்தர வர்க்கப் பெண்களையும் இத்திட்டத்திற்குள் கொண்டு வந்து, பயனாளிகளின் எண்ணிக்கையை சுமார் 1.8 கோடியாக உயர்த்த அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. அரசியல் ரீதியாக வரவிருக்கும் தேர்தல்களைக் கருத்தில் கொண்டு, இந்த அதிரடி மாற்றங்கள் முக்கிய வியூகமாகப் பார்க்கப்படுகின்றன.
இது குறிப்பாக, ஆண்டுக்கு 3,600 யூனிட்டுகளுக்கு மேல் மின்சாரம் பயன்படுத்தக் கூடாது என்ற விதியை நீக்கவும், நில அளவு தொடர்பான கட்டுப்பாடுகளைத் தளர்த்தவும் தீவிர ஆலோசனைகள் நடைபெற்று வருகின்றன. “சொன்னதைச் செய்வோம்” என்ற முழக்கத்தோடு, நிதி நெருக்கடிகளுக்கு இடையிலும் இத்திட்டத்தை விரிவுபடுத்துவதன் மூலம் பெண்களின் வாக்குகளை ஒட்டுமொத்தமாக அறுவடை செய்ய திமுக அரசு முனைப்பு காட்டி வருகிறது. இதன் மூலம் சுமார் ஒரு கோடிக்கும் அதிகமான கூடுதல் குடும்பங்களுக்கு நேரடிப் பலன் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
