அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான பதற்றம் மீண்டும் அதிகரித்துள்ள நிலையில், ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாஃப் அமெரிக்காவிற்கு விடுத்துள்ள ஒரு வினோதமான எச்சரிக்கை உலகளவில் கவனத்தை ஈர்த்துள்ளது. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக செல்லும் கப்பல்களைத் தடுக்கப்போவதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் விடுத்த மிரட்டலுக்குப் பதிலடி தரும் வகையில், காலிபாஃப் ஒரு கணித சூத்திரத்தை தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார்.
மேலும் அமெரிக்காவில் தற்போதுள்ள பெட்ரோல் விலையைக் குறிப்பிட்டுள்ள அவர், ஈரானுக்கு எதிராகத் தடைகள் விதிக்கப்பட்டால், எரிபொருள் தட்டுப்பாட்டினால் பெட்ரோல் விலை வரலாறு காணாத அளவிற்கு உயரும் என்றும், அமெரிக்கர்கள் தற்போதைய விலையை எண்ணி ஏங்கும் நிலை ஏற்படும் என்றும் ஒரு மறைமுக ‘கணித’ எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
முன்னதாக, ஈரான் அணு ஆயுதப் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாததால், ஹார்முஸ் ஜலசந்தியில் ஈரானுக்குச் சுங்கக் கட்டணம் செலுத்திப் பயணிக்கும் கப்பல்களை அமெரிக்கக் கடற்படை இடைமறிக்கும் என்று அதிபர் ட்ரம்ப் அதிரடியாக அறிவித்திருந்தார். ஈரானின் அச்சுறுத்தல்களுக்குப் பணியப் போவதில்லை என்றும், அங்குள்ள கண்ணிவெடிகளை அகற்றத் தயங்க மாட்டோம் என்றும் அவர் எச்சரித்திருந்தார்.
இதற்குப் பதிலடியாகவே காலிபாஃப், ஹார்முஸ் ஜலசந்தி முடக்கப்பட்டால் உலகளாவிய கச்சா எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டு அமெரிக்கப் பொருளாதாரத்தில் பெரும் தாக்கம் ஏற்படும் என்பதைச் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த மோதல் போக்கு இரு நாடுகளுக்கும் இடையே ஒரு போர்ச் சூழலை உருவாக்குமோ என்ற அச்சத்தைப் பன்னாட்டு அரங்கில் ஏற்படுத்தியுள்ளது.
