உத்தரப் பிரதேச மாநிலத்தில் செல்லப்பிராணியான நாய்க்குட்டியை மணமகன் வீட்டார் தாக்கியதால், ஆத்திரமடைந்த மணமகள் திருமணத்தையே ரத்து செய்த வினோத சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரயாக்ராஜ் பகுதியைச் சேர்ந்த தான்யா கேசர்வானி மற்றும் சுமித் கேசர்வானி ஆகிய இருவரும் காதலித்து வந்த நிலையில், இருவீட்டு பெரியவர்களின் சம்மதத்துடன் கடந்த பிப்ரவரி 18-ஆம் தேதி ஃபதேபூர் மாவட்டத்தில் இவர்களது திருமணத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
திருமணச் சடங்குகள் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில், மணமகள் தான்யா அழைத்து வந்திருந்த அவரது செல்ல நாய்க்குட்டி தொடர்ந்து குறைத்துக் கொண்டே இருந்துள்ளது. இதனால் எரிச்சலடைந்த மணமகன் வீட்டைச் சேர்ந்த நபர் ஒருவர் அந்த நாய்க்குட்டியைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. தனது செல்லப்பிராணி துன்புறுத்தப்பட்டதைக் கண்டு அதிர்ச்சியடைந்த மணமகள் வீட்டார் மணமகன் வீட்டாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட, அது ஒரு கட்டத்தில் இரு குடும்பத்தினருக்கும் இடையிலான பெரும் கைகலப்பாக மாறியது.
நாற்காலிகள் மற்றும் கம்பிகளால் இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதால் திருமண மண்டபமே ரணகளமானது. தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீஸ் விசாரணையில், “தனது செல்லப்பிராணியை மதிக்காத மற்றும் வன்முறையில் ஈடுபடும் இத்தகைய குடும்பத்தில் நான் வாழ விரும்பவில்லை” என உறுதியாகத் தெரிவித்த மணமகள் தான்யா, திருமணத்தை அதிரடியாக ரத்து செய்தார். ஒரு நாய்க்குட்டியால் தொடங்கிய சண்டை திருமணத்தையே நிறுத்திய இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
