“நாங்க தோத்துட்டோம்.. ஆனா செத்துடல!”… விஜய்க்கு ஏதாவது நடந்தா நாங்க பொறுப்பல்ல… ஓப்பனாக எச்சரிக்கை விடுத்த ஆர்.பி.உதயகுமார்… பரபரக்கும் அரசியல்…!

By Nanthini on ஆனி 7, 2026

Spread the love

விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) அண்மைக்கால அரசியல் நகர்வுகள் மற்றும் அதிமுகவினர் அக்கட்சியில் இணைவது குறித்த விவாதங்கள் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இந்நிலையில், மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், தவெக மற்றும் அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகளை மிகக் கடுமையான வார்த்தைகளால் விமர்சித்துள்ளார். “நாங்கள் தேர்தலில் தோற்றுப் போயிருக்கலாமே தவிர, செத்துப் போகவில்லை; எத்தனை விஜய் வந்தாலும் அதைச் சந்திக்கும் துணிவு அதிமுகவிற்கு உண்டு” என்று அவர் ஆவேசமாகத் தெரிவித்துள்ளார்.

அதிமுகவினர் தவெகவுக்குத் தாவி வருவதாக எழுந்துள்ள செய்திகளுக்குப் பதிலளித்த அவர், தலைமை மீதுள்ள தற்காலிக மனத்தாங்கல் காரணமாகச் சிலர் மாற்று முகாமிற்குச் செல்வது அரசியல் வரலாற்றில் புதிதல்ல என்று குறிப்பிட்டார். கடந்த காலத்தில் நாவலர் நெடுஞ்செழியன், எஸ்.டி.சோமசுந்தரம் போன்ற தலைவர்களே அதிருப்தியால் பிரிந்து சென்று, பின்னர் தாய் கழகத்திற்கே திரும்பிய வரலாற்றைச் சுட்டிக்காட்டிய அவர், தற்போது சென்றுள்ள முன்னாள் அமைச்சர்களுக்கும் தெளிவு பிறக்கும்போது அவர்கள் மீண்டும் அதிமுகவிற்கே திரும்புவார்கள் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

   

தவெக தலைவர் விஜய்யின் அரசியல் அணுகுமுறையை விமர்சித்த ஆர்.பி. உதயகுமார், அவர் ஆணவத்துடன் பேசி வருவதாகக் குற்றம் சாட்டினார். தேர்தலுக்கு முன்பு தவெகவை நம்பி எந்தவொரு லெட்டர்பேடு கட்சியும் வராத நிலையில், தற்போது மாயாஜாலம் போலக் கிடைத்துள்ள அதிகாரத்தை நோக்கிச் சிலர் ஓடுவதாகச் சாடினார். மேலும், “விஜய்க்கு ஏதாவது ஆபத்து நேர்ந்தால் அதற்கு அதிமுக பொறுப்பல்ல” என்று எச்சரித்த அவர், விவசாயிகளின் பயிர்க்கடன் தள்ளுபடிப் போராட்டம் மற்றும் மேகதாது விவகாரங்களில் விஜய் மௌனம் காப்பது ஏன் என்றும், ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ளவே திமுக எம்.எல்.ஏ-க்களை அவர் சந்தித்துப் பேசினாரா என்றும் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினார்.

   

இறுதியாக, அதிமுகவில் இருந்து 50 சதவீதத்தினர் தவெகவிற்கு வந்துவிட்டதாகக் கூறிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை ‘பைத்தியக்காரர்’ மற்றும் ‘அரவேக்காடு’ என்று ஆர்.பி. உதயகுமார் மிகக் கடுமையாகச் சாடினார். கைக்கூலிகளை வைத்துக் கொண்டு ஆள் பிடிக்கும் வேலையில் விஜய் ஈடுபட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், இதுபோன்ற அடிப்படையற்ற கருத்துகளைக் கூறும் நபர்களை அமைச்சரவையில் சகித்துக் கொள்ள வேண்டியிருப்பதுதான் மக்களின் தலைவிதி என்று கூறி தனது கண்டனத்தைப் பதிவு செய்தார்.