“நாங்களே எதிர்பார்க்கல… ஈரான் இவ்வளவு பவர்ஃபுல்-ஆ?”… அதிபர் ட்ரம்ப்பின் எக்ஸ்க்ளூசிவ் பேட்டி…!

By Muthu Mani on பங்குனி 17, 2026

Spread the love

மத்திய கிழக்கில் அமெரிக்க-இஸ்ரேலிய கூட்டுப் படைகளுக்கும் ஈரானுக்கும் இடையிலான போர் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், வளைகுடா நாடுகள் கடும் பாதிப்புகளைச் சந்தித்து வருகின்றன. அமெரிக்காவிற்கு ராணுவ தளங்களை வழங்கிய கத்தார், சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் போன்ற நாடுகள் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தி வருகிறது. குறிப்பாக, துபாய் சர்வதேச விமான நிலையத்திற்கு அருகே நடத்தப்பட்ட தாக்குதலால் வான்வழிப் போக்குவரத்து முற்றிலும் முடங்கியுள்ள சூழலில், ஈரானின் இந்த அதிரடித் தாக்குதல்கள் சர்வதேச அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன.

இந்த இக்கட்டான சூழலில் வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், ஈரானின் பதிலடி தங்களுக்குப் பெரும் வியப்பை அளித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். ஈரான் வலிமையும் தீவிரத்தன்மையும் கொண்ட நாடு என்பதை ஒப்புக்கொண்ட அவர், வளைகுடா நாடுகள் மீது அவர்கள் இவ்வளவு குறுகிய காலத்தில் தாக்குதல் நடத்துவார்கள் என்று தாங்கள் எதிர்பார்க்கவில்லை எனக் குறிப்பிட்டார். ஈரானின் பெரும் பகுதி ஆயுதக் கட்டமைப்புகளை அழித்துவிட்ட போதிலும், அவர்கள் தொடர்ந்து திருப்பித் தாக்கி வருவது தங்களுக்கு அதிர்ச்சியளிப்பதாக ட்ரம்ப் ஒப்புக் கொண்டுள்ளார்.

   

ஈரானின் ராணுவ பலம் குறித்துப் பேசிய ட்ரம்ப், அவர்களிடம் இருந்த ஆயிரக்கணக்கான ஏவுகணைகள், ட்ரோன்கள் மற்றும் அவற்றைத் தயாரிக்கும் ஆலைகளில் பெரும்பாலானவற்றை அமெரிக்கப் படைகள் அழித்துவிட்டதாகக் கூறினார். தற்போது ஈரானிடம் சுமார் 8 சதவீத அளவிலான ஆயுதங்களே எஞ்சியிருப்பதாகவும், ஆனாலும் அவர்கள் தொடர்ந்து ஏவுகணைகளை ஏவி வருவதாகவும் அவர் தெரிவித்தார். முன்னதாக ஈரானின் கடற்படை மற்றும் விமானப்படை முற்றிலும் நிர்மூலமாக்கப்பட்டுவிட்டதாக அறிவித்திருந்த நிலையில், தற்போது ஈரானின் மீண்டெழும் சக்தியைப் பார்த்து ட்ரம்ப் பிரம்மிப்புடன் பேசியிருப்பது போரின் போக்கை மாற்றியுள்ளது.

   

ஈரான் முழுவதும் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இலக்குகளைத் தாக்கி அழித்துள்ளதாகக் குறிப்பிட்ட அதிபர், ஹார்முஸ் நீரிணையில் கன்னி வெடிகளை வைக்கும் ஈரானின் திட்டத்தை முறியடித்துள்ளதாகக் கூறினார். இந்த முக்கிய கடல்வழிப் பாதையைப் பாதுகாக்க ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் ஒத்துழைக்க வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார். ஈரானின் தலைமை மற்றும் கட்டமைப்புகள் சிதைக்கப்பட்டதாகக் கூறப்பட்டாலும், அவர்களின் தொடர் தாக்குதல்கள் இந்தப் போர் இப்போதைக்கு முடிவுக்கு வராது என்பதையே காட்டுவதாக அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.