“விஜய் கூப்பிட்டா அரசியலுக்கு போவேன்”….. இன்ஸ்டா ‘வாட்டர் மெலன் ஸ்டார்’ திவாகரின் அதிரடி பேட்டி….!

By Nanthini on ஐப்பசி 21, 2026

Spread the love

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்ஸ்டா பிரபலம் ‘வாட்டர் மெலன் ஸ்டார்’ திவாகர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியவை தற்போது சமூக வலைதளங்களில் கவனம் ஈர்த்துள்ளன. அப்போது தமிழகத்தில் அதிகரித்து வரும் கொலைச் சம்பவங்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் பரவி வரும் பட்டாக்கத்தி ரீல்ஸ் மோகம் குறித்து அவர் கடுமையான கவலை தெரிவித்தார். சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த சுள்ளான் மதன் படுகொலை மற்றும் அதையடுத்து வெளியாகும் பழிக்குப் பழி போஸ்டர்கள் குறித்துப் பேசும்போது அவர் மிகுந்த மனவேதனை அடைந்தார். மேலும், இது போன்ற வன்முறை கலாச்சாரத்தைத் தடுத்து, குற்றச் செயல்களில் ஈடுபடும் இளைஞர்களுக்கு நல்லொழுக்க வகுப்புகள் நடத்தி அவர்களின் வாழ்க்கைப் பாதையை மாற்ற தமிழ்நாடு அரசும் காவல்துறையும் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

தொடர்ந்து பேசிய அவர், இன்ஸ்டாவில் பிரபலமானவர்கள் தங்கள் ரசிகர்களிடம் பரிசுப் பொருட்கள் கேட்டுப் பெறுவது முறையல்ல என்றும், அது தவறான முன்னுதாரணமாகும் என்றும் எச்சரித்தார். சினிமா அனுபவங்களைப் பகிர்ந்துகொண்ட அவர், ‘ஜெயிலர் 2’ படத்தைப் பார்க்கத் தியேட்டருக்குச் சென்றபோது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ரசிகர்கள் தன்னை “வாட்டர்மெலன் ஸ்டார்” என அழைத்துச் செல்பி எடுத்துக் கொண்டது மிகுந்த மகிழ்ச்சி அளித்தது என்றார். மேலும், ‘ஜெயிலர் 3’ பாகம் எடுத்தால் அதில் ‘மூர்த்தி’ கதாபாத்திரத்தில் தன்னை நடிக்க வைத்தால் படத்தின் வசூல் மேலும் அதிகரிக்கும் எனத் தனது நண்பர்களும் பொதுமக்களும் கருதுவதாகவும் அவர் கலகலப்பாகத் தெரிவித்தார்.

   

தனது அரசியல் பிரவேஷம் குறித்த கேள்விக்கு பதிலளித்த திவாகர், தனக்கு இப்போதைக்கு அரசியலில் நேரடியாக இறங்கும் ஆர்வம் எதுவும் இல்லை என்று தெளிவுபடுத்தினார். நடிகர் விஜய் பல படங்களில் நடித்துவிட்டு அரசியலுக்குச் சென்றுவிட்டதைப் போல, தானும் சினிமாவில் பல படங்களில் நடித்து அனுபவம் பெற்ற பின்னரே அரசியல் குறித்து யோசிப்பதாகக் கூறினார். இருப்பினும், தமிழக முதல்வர் விஜய் தம்மைக் கூப்பிட்டால் மட்டுமே தான் அரசியலுக்குச் செல்வேன் என்றும், மற்றபடி சொந்த விருப்பத்தின் அடிப்படையில் அரசியலில் நுழையும் எண்ணம் தனக்கு இல்லை என்றும் அவர் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

   

செய்தியாளர் சந்திப்பின் இறுதியில் தனது சினிமா வாய்ப்புகள் குறித்த மகிழ்ச்சியான செய்தியையும் அவர் பகிர்ந்து கொண்டார். தான் தற்போது ஹீரோவாக ஒரு புதிய படத்தில் கமிட்டாகியுள்ளதாகவும், அப்படத்தின் பூஜை போடப்பட்டவுடன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் அவர் தெரிவித்தார். சமூகப் பிரச்சினைகள் குறித்துக் குரல் கொடுத்த அதேவேளையில், தனது தனித்துவமான நகைச்சுவை பாணியில் செய்தியாளர்களிடம் பேசிச் சென்ற திவாகரின் இந்தப் பேட்டி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.