இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் மூலம் பிரபலமாகி, பிக்பாஸ் சீசன் 9-ல் போட்டியாளராகப் பங்கேற்ற ‘வாட்டர்மெலன் ஸ்டார்’ திவாகர், அரசுப் பள்ளி ஒன்றில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டது சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் பெண்களிடம் தவறாக நடந்துகொண்டது மற்றும் சாதி ரீதியான கருத்துக்களைப் பேசியது போன்ற புகார்களால் குறுகிய காலத்திலேயே வெளியேற்றப்பட்ட ஒருவரை, மாணவர்களுக்கு நல்வழி காட்ட வேண்டிய பள்ளி விழாவிற்கு அழைத்தது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான செல்பி வீடியோவில், திவாகர் “நடிப்பு அரக்கன்” என்று கத்த, மாணவர்களும் அதேபோல் உற்சாகமாக கூச்சலிடுவது வெளியாகி விவாதங்களைக் கிளப்பியுள்ளது.
சமீபகாலமாக, தகுதியற்ற இன்ஸ்டா பிரபலங்களை கல்வி நிறுவனங்களுக்குச் சிறப்பு விருந்தினர்களாக அழைக்கும் கலாச்சாரம் அதிகரித்து வருவது குறித்து கல்வியாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர். மாணவர்களின் எதிர்காலத்திற்கு முன்மாதிரியாக விளங்கக்கூடிய அறிஞர்களையும் சாதனையாளர்களையும் விடுத்து, சர்ச்சைக்குரிய நபர்களுக்கு மேடை அமைத்துக் கொடுப்பது தவறான முன்னுதாரணம் என்று சமூக ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்தச் சம்பவம் தொடர்பாகச் சம்பந்தப்பட்ட பள்ளி ஆசிரியர்கள் மற்றும் நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது.
