ஈரான் மீது போர் தொடுக்கிறதா அமெரிக்கா…? எல்லையில் குவியும் போர் விமானங்கள்…! டிரம்ப் போடும் ‘மாஸ்டர் பிளான்’…!

By Devi Ramu on தை 23, 2026

Spread the love

ஈரான் நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி மற்றும் விலைவாசி உயர்வுக்கு எதிராக அந்நாட்டு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தப் போராட்டங்களுக்கு அமெரிக்காவும் இஸ்ரேலும் தூண்டுதலாக இருப்பதாக ஈரான் குற்றம் சாட்டியுள்ள நிலையில், இரு நாடுகளுக்கும் இடையிலான பகை உச்சகட்டத்தை எட்டியுள்ளது.

இதன் விளைவாக, டொனால்ட் டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு, எஃப்-15இ (F-15E) ரகப் போர் விமானங்கள் மற்றும் ‘யுஎஸ்எஸ் ஆபிரகாம் லிங்கன்’ என்ற பிரம்மாண்ட விமானம் தாங்கிப் போர்க்கப்பலை ஈரான் எல்லைக்கு அருகே நிலைநிறுத்தியுள்ளது. ஈரானின் அணுசக்தி நிலையங்களைத் தாக்கும் வல்லமை கொண்ட இந்தப் படைகளின் நகர்வு, மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர் மேகங்களைச் சூழ வைத்துள்ளது.

   

மேலும், தனது நட்பு நாடான இஸ்ரேலைப் பாதுகாக்கும் வகையில் ஜோர்டான் மற்றும் கத்தார் போன்ற பகுதிகளில் அதிநவீன ஏவுகணை எதிர்ப்பு அமைப்புகளை அமெரிக்கா பலப்படுத்தியுள்ளது. டிரம்பிற்கு ஈரானிலிருந்து கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாகக் கூறப்படும் நிலையில், “ராணுவ நடவடிக்கைக்கான திட்டங்கள் தயாராக உள்ளன” என்று அவர் எச்சரித்திருப்பது பதற்றத்தை அதிகரித்துள்ளது.

   

அமெரிக்கா தாக்குதல் நடத்தினால் இஸ்ரேல் மீது பதில் தாக்குதல் நடத்த ஈரான் திட்டமிட்டுள்ளதால், இஸ்ரேலியப் படைகளும் தீவிர உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. உலக நாடுகளை உற்று நோக்க வைத்துள்ள இந்த ராணுவக் குவிப்பு, எப்போது வேண்டுமானாலும் ஒரு பெரும் மோதலாக வெடிக்கலாம் என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.