சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற திமுக அவசர செயற்குழுக் கூட்டத்தில், கட்சியின் எதிர்காலக் கட்டமைப்பு மற்றும் தேர்தல் பின்னடைவுக்கான காரணங்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. கூட்டத்தில் உரையாற்றிய திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், களத்தில் உழைக்கும் அடிமட்டத் தொண்டர்களைப் புறக்கணித்துவிட்டு, ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்களுடன் நெருக்கம் காட்டி வரும் சில மூத்த நிர்வாகிகள் மற்றும் மாவட்டச் செயலாளர்களைக் கடுமையாக எச்சரித்துப் பேசினார்.
சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் திமுக உறுப்பினர்கள் தீவிர அரசியல் நிலைப்பாடுகளை எடுத்து வரும் சூழலில், சில மூத்த நிர்வாகிகள் தவெக அமைச்சர்களுடன் இணக்கம் காட்டி வருவது தலைமைக்குக் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. செயற்குழுவில் பேசிய ஸ்டாலின், “எதிர்க்கட்சிக்காரர்களைப் பார்த்தால் மலரும் முகம், நம் கட்சிக்காரர்களைப் பார்த்தால் மலர்வது இல்லை; தனக்கு இணையாக யாரும் வளரக் கூடாது என நினைப்பவர்கள் மாற்றிக் கொள்ளாவிட்டால் தானாகவே ஓரங்கட்டப்படுவார்கள்” என நேரடியாகவே சாடினார்.
சொந்தக் கட்சித் தொண்டர்களை உதாசீனப்படுத்தி மாற்றுக் கட்சியினரோடு கைகோர்ப்பது கட்சியின் அடித்தளத்தையே பலவீனப்படுத்தும் என்பதைச் சுட்டிக்காட்டிய தலைமை, கட்சி அமைப்பில் அதிரடி சீரமைப்புகளை மேற்கொண்டுள்ளது. தங்கம் தென்னரசு தலைமையிலான குழுவின் பரிந்துரைப்படி, அதிகாரப் பரவலாக்கலை நோக்கமாகக் கொண்டு 77-ஆக இருந்த திமுக மாவட்டங்கள் 110-ஆகப் பிரிக்கப்பட்டு நிர்வாகக் கட்டமைப்பு விரிவாக்கப்பட்டுள்ளது.
மேலும், மாவட்டச் செயலாளர் பதவிக்கு 70 வயது உச்சவரம்பு, அதிகபட்சம் 2 முறை மட்டுமே பதவி வகிக்கும் கட்டுப்பாடு மற்றும் நகரச் செயலாளர் பதவி ரத்து உட்பட 9 முக்கியத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. “ஒரு மாவட்டத்தில் ஒருவர் மட்டுமே எல்லாவற்றையும் தீர்மானிக்க முடியாது” என்று திட்டவட்டமாகக் கூறிய மு.க. ஸ்டாலின், புதிய தலைமுறையினருக்கு வழிகாட்டி இயங்கத் தவறினால் கடுமையான நடவடிக்கைகள் தொடரும் என எச்சரித்துள்ளார்.
