தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் மூன்று நாட்களே உள்ள நிலையில், கடலூரில் செய்தியாளர்களைச் சந்தித்த பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், திமுக ஆட்சியை அகற்ற விஜய் ஆதரவாளர்கள் அதிமுக கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும் என அதிரடி கோரிக்கையை விடுத்துள்ளார். இத்தேர்தலில் விஜய் அதிக வாக்குகளைப் பெறுவார் என்றாலும், அவரால் வெற்றி பெற முடியாது என்று குறிப்பிட்ட அன்புமணி, திமுகவை அதிகாரத்தில் இருந்து அகற்ற வேண்டும் என்ற விஜய்யின் கனவு நனவாக வேண்டுமானால், அந்த வாக்குகள் வீணாகாமல் அதிமுக கூட்டணிக்கு வந்து சேர வேண்டும் எனத் தெரிவித்தார்.
விஜய்யின் தீவிர ரசிகர்கள் அவருக்குத்தான் வாக்களிப்பார்கள் என்பதில் மாற்றமில்லை என்று கூறிய அன்புமணி, விஜய்யின் ஆதரவாளர்கள் மற்றும் நடுநிலையாளர்கள் தங்கள் வாக்குகளைச் சிதறவிடக் கூடாது என வலியுறுத்தினார். 2016-ல் “மாற்றம் முன்னேற்றம் அன்புமணி” எனத் தாம் தனித்து நின்றபோது கிடைத்த மக்கள் வரவேற்பை உதாரணமாகக் காட்டிய அவர், அப்போது பலரும் திமுகவைத் தோற்கடிக்க அதிமுகவிற்கு வாக்களித்த அதே சூழல்தான் தற்போது விஜய்க்கும் நிலவுவதாகச் சுட்டிக்காட்டினார். எதிர்க்கட்சி வரிசையில் கூட திமுக அமரக் கூடாது என்பதே தங்கள் இலக்கு என்றும் அவர் திட்டவட்டமாகக் கூறினார்.
மேலும், தேமுதிக – திமுக கூட்டணி குறித்துப் பேசிய அன்புமணி, மறைந்த கேப்டன் விஜயகாந்தின் ஆன்மா கூட இதனை மன்னிக்காது எனச் சாடினார். தனது கடைசி மூச்சு வரை திமுகவை எதிர்த்து நின்றவர் விஜயகாந்த் என்றும், அவருடைய பரம எதிரியுடனேயே தற்போது தேமுதிக கூட்டணி வைத்திருப்பதை அக்கட்சியின் தொண்டர்களே ஏற்கவில்லை என்றும் அவர் விமர்சித்தார். விஜயகாந்தின் கொள்கைக்கு விரோதமாகச் செயல்படும் இந்த முடிவைத் தேர்தல் களத்தில் மக்கள் நிராகரிப்பார்கள் என அன்புமணி தனது பேட்டியில் நம்பிக்கை தெரிவித்தார்.
