கடைசி நிமிட டுவிஸ்ட்…. “ராகுல் காந்தியின் 2 நிமிட வீடியோ”… தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு…!

By Nanthini on சித்திரை 23, 2026

Spread the love

தமிழக சட்டசபை தேர்தல் இன்று நடைபெற உள்ள நிலையில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தமிழக வாக்காளர்களுக்கு வேண்டுகோள் விடுத்து ஒரு முக்கிய வீடியோவை தனது ‘எக்ஸ்’ வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்தத் தேர்தல் என்பது வெறும் ஆட்சி மாற்றத்திற்கான தேர்தல் மட்டுமல்ல, இது திமுக – காங்கிரஸ் கூட்டணிக்கும், அதிமுக – பாஜக கூட்டணிக்கும் இடையேயான சித்தாந்தப் போர் என்று அவர் அதில் குறிப்பிட்டுள்ளார். பாஜகவின் ஆதிக்கத்தை எதிர்த்து தமிழகத்தின் தனித்துவத்தைப் பாதுகாக்க மக்கள் முன்வர வேண்டும் என்பதே அவரது உரையின் மையமாக அமைந்தது.

பாஜக தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி அதிமுகவைக் கட்டுப்படுத்துவதாகவும், அதன் மூலம் தமிழ் கலாசாரம், பண்பாடு மற்றும் மொழியை அழித்து தமிழகத்திற்குள் நுழைய முயற்சிப்பதாகவும் ராகுல் காந்தி குற்றம் சாட்டினார். அதிமுக தலைவர்கள் மீதான ஊழல் வழக்குகளால் அவர்கள் பாஜகவுடன் சமரசம் செய்துகொண்டுள்ளதாகச் சாடிய அவர், டெல்லியில் இருந்து கொண்டு தமிழகத்தை ஆள பாஜக நினைப்பதாகக் குறிப்பிட்டார். தமிழகத்தை தமிழக மக்களும், தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழக முதல்வருமே ஆள வேண்டும் என்பதுதான் தங்களின் நோக்கம் என்று அவர் உறுதியளித்தார்.

   

தமிழகத்தின் சமூக நீதி மரபு குறித்துப் பேசிய ராகுல் காந்தி, மறைந்த முதல்வர் காமராஜர் தமிழகத்தில் சமூக நீதிக்கான வலுவான அடிக்கல்லை நாட்டினார் என்பதை நினைவுகூர்ந்தார். அந்தப் பாதையிலேயே தற்போதைய திமுக – காங்கிரஸ் கூட்டணி பயணித்து வருவதாகவும், தமிழக அரசு பெண்கள், இளைஞர்கள் மற்றும் முதியவர்களுக்குத் துணையாக இருப்பதாகவும் அவர் பாராட்டு தெரிவித்தார். இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க சமூக நீதிப் பாரம்பரியத்தைத் தொடர காங்கிரஸ் மற்றும் திமுக கூட்டணிக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

   

இறுதியாக, கூட்டணி கட்சிகளிடையே ஒற்றுமை நிலவ வேண்டியதன் அவசியத்தை ராகுல் காந்தி வலியுறுத்தினார். காங்கிரஸ் தொண்டர்கள் அனைவரும் திமுக உள்ளிட்ட கூட்டணி வேட்பாளர்களுக்கு முழு ஆதரவை வழங்க வேண்டும் என்றும், அதேபோல் கூட்டணி கட்சிகள் காங்கிரஸ் வேட்பாளர்களின் வெற்றிக்கு உதவ வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்தார். இன்று காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறவுள்ள வாக்குப்பதிவில் மக்கள் திரளாகப் பங்கேற்று மாற்றத்தை உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் தனது உரையை அவர் நிறைவு செய்தார்.