தமிழ் சினிமாவில் கதாசிரியராகவும் இயக்குனராகவும் நடிகராகவும் திகழ்ந்தவர் விசு. அவர் இயக்கிய மணல் கயிறு, சிதம்பர ரகசியம், சம்சாரம் அது மின்சாரம் ஆகிய படங்கள் சூப்பர் ஹிட் படங்களாக அமைந்தன.
அவரை புகழின் உச்சத்துக்கு அழைத்துச் சென்ற படம்தான் ‘சம்சாரம் அது மின்சாரம்’ படம். மிகக்குறைந்த பட்ஜெட்டில் எடுத்து சூப்பர்ஹிட் ஆன அந்த படம் வசூலை வாரிக் குவித்ததோடு தேசிய விருதையும் பெற்றது. வெறும் 15 லட்சம் செலவில் எடுக்கப்பட்ட இந்தப்படத்தில் விசுவுடன் ரகுவரன், லட்சுமி, கமலா காமேஷ், மனோரமா, சந்திரசேகர், காஜா ஷெரீப், டெல்லிகணேஷ் உள்ளிட்ட ஒரு நட்சத்திரப் பட்டாளமே நடித்திருந்தது.
இந்த படத்தின் வெற்றியால் விசுவுக்கு அடுத்தடுத்து பல படங்களில் நடிக்கவும் வாய்ப்பு வந்தது. ஆனால் அவர் தன்னுடைய படங்களில் கவனம் செலுத்தியதால் அவரால் அதிகமாக படங்களில் நடிக்க முடியவில்லை. இந்நிலையில் விசுவின் கதை பற்றிய அறிவை வியந்து பேசியுள்ளார் அம்மா கிரியேஷன்ஸ் டி சிவா.
அவர் சமீபத்தில் அளித்த ஒரு நேர்காணலில் “நான் பிரபுவை வைத்து சின்ன மாப்ள என்ற படமெடுத்தேன். அதில் முக்கியக் கதாபாத்திரத்தில் விசு அவர்களை நடிக்க கேட்டிருந்தோம். முதல் நாள் ஷூட்டிங்கில் விசு வந்து நடித்தார். அப்போது என்னை அழைத்து இந்த படம் தப்பா இருக்கு. இன்னைக்கு ஷூட்டிங்க கேன்சல் பண்ணிடுங்க. நாம கொஞ்சம் பேசணும் என்றார்.
எனக்கு ஷாக் ஆகிவிட்டது. ஏனென்றால் நாங்கள் எல்லாமே சிறப்பாக இருப்பதாக நினைத்தோம். அவர் என்னை அழைத்து “படம் முழுக்க நான் சொல்வதைக் கேட்டு பிரபு அனைத்தையும் செய்வது போல உள்ளது. அப்படி இருந்தால் அது விசு படமாகிவிடும். இது பிரபு படமாக இருக்க வேண்டுமென்றால் எல்லாத்தையும் மாற்றுங்கள்’ என்று சொல்லிவிட்டார். அதன் பிறகுதான் எனக்கு அந்த குறை தெரிந்தது. அதன் பிறகு திரைக்கதையை முழுக்க முழுக்க மாற்றினோம். விசு சாரால்தான் அந்த படம் தப்பிச்சது” எனக் கூறியுள்ளார்.