நேபாளத்தின் காவ்ரேபிளாஞ்சோக் மாவட்டத்தில் அமைந்துள்ள ஹோக்ஸே கிராமம், சட்டவிரோத சிறுநீரக விற்பனையின் மையமாக மாறியதால் உலகளவில் “சிறுநீரகப் பள்ளத்தாக்கு” என்று அழைக்கப்படுகிறது. கடும் வறுமை, தீர்க்க முடியாத கடன் மற்றும் அன்றாட தேவைகளுக்கான பண நெருக்கடி காரணமாக, அங்குள்ள பெரும்பாலான குடும்பங்களில் குறைந்தபட்சம் ஒருவராவது தங்கள் சிறுநீரகத்தை விற்கும் அவல நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். மக்களின் இந்த ஏழ்மையைப் பயன்படுத்திக் கொண்ட உறுப்புக் கடத்தல் தரகர்கள், கிராமவாசிகளின் அறியாமையைச் சாதகமாக்கிக் கொண்டு சட்டவிரோதமாக சிறுநீரகங்களைச் சேகரித்துள்ளனர்.
மருத்துவ அறிவோ கல்வியறிவோ இல்லாத கிராமமக்களிடம், “முடி மற்றும் நகங்களைப் போல சிறுநீரகமும் வெட்டி எடுத்த பின் மீண்டும் வளர்ந்துவிடும்” என்ற அதிர்ச்சியூட்டும் பொய்யைக் கூறி தரகர்கள் ஏமாற்றியுள்ளனர். இந்த போலி வாக்குறுதிகளை நம்பிய மக்கள், வெறும் 20,000 முதல் 70,000 நேபாள ரூபாய் வரை மட்டுமே பெற்றுக்கொண்டு தங்கள் சிறுநீரகங்களை விற்றுள்ளனர். ஏழை மக்களிடமிருந்து அடிமாட்டு விலைக்கு சிறுநீரகங்களைப் பெற்ற இந்தச் சட்டவிரோதக் கும்பல்கள், அவற்றை சர்வதேச சந்தையில் மிக அதிக விலைக்கு விற்று பெருமளவில் லாபம் ஈட்டியுள்ளன.
முறையான மருத்துவ வசதிகள் இல்லாத சூழலில் மேற்கொள்ளப்பட்ட இந்தச் சட்டவிரோத அறுவை சிகிச்சைகள், கிராமமக்களுக்குப் மீள முடியாத ஆபத்துக்களை ஏற்படுத்தியுள்ளன. ஒரு சிறுநீரகத்துடன் மனிதனால் வாழ முடியும் என்றாலும், போதிய மருத்துவப் பராமரிப்பு இன்மையால் பலர் கடுமையான நீண்டகால உடல்நலக் குறைபாடுகள், தசை பலவீனம் மற்றும் உளவியல் ரீதியான பாதிப்புகளுக்கு உள்ளாகியுள்ளனர். வறுமையில் இருந்து மீள நினைத்து சிறுநீரகத்தை விற்ற ஹோக்ஸே கிராம மக்கள், தற்போது நாள்பட்ட மருத்துவ சிக்கல்களினாலும் வாழ்வாதார இழப்பினாலும் மேலும் அவதிப்பட்டு வருகின்றனர்.
