உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸில் நிலத்தகராறு தொடர்பாக வந்த புகாரை விசாரிக்கச் சென்ற ‘டயல் 112’ அவசரக்கால காவல் குழுவினர் மீது கிராம மக்கள் கடுமையான தாக்குதல் நடத்தினர். பெண்களை உள்ளடக்கிய ஒரு கும்பல் காவல்துறையினரைச் சூழ்ந்துகொண்டு, அவர்களை வாகனத்திலிருந்து வெளியே இழுத்துப் போட்டுத் தாக்கினர். இத்தாக்குதலில் காவலர்களின் சீருடைகள் கிழிக்கப்பட்டதோடு, காவல் வாகனத்தின் மீது கற்களை வீசி அதன் கண்ணாடிகளையும் கிராம மக்கள் அடித்து உடைத்தனர்.
இந்தச் சம்பவத்தின் போது காவல்துறையினர் நிலைகுலைந்து, கிராம மக்களிடம் தங்களை விட்டுவிடுமாறு கைகூப்பிக் கெஞ்சும் காட்சிகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. இருப்பினும், காவல்துறையினர் குடிபோதையில் இருந்ததாகவும், அங்கிருந்த பெண்களிடம் தவறாக நடந்து கொண்டதாகவும் கிராமப் பெண்கள் குற்றம் சாட்டியுள்ளனர். காவல்துறையினர் மீதான இந்தத் தாக்குதல் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
