சென்னை உயர் நீதிமன்றத்தில், பெரம்பூர் தொகுதியில் முதல்வர் விஜயின் வெற்றியை எதிர்த்து வாக்காளர் தினேஷ் என்பவர் தாக்கல் செய்த வழக்கு விசாரணைக்கு வந்தது. பண்ருட்டியில் உள்ள சுமார் ரூ.30 கோடி மதிப்பிலான சொத்தை வேட்புமனுவில் விஜய் மறைத்துவிட்டதாக அந்த மனுவில் குற்றம் சாட்டப்பட்டிருந்தது. இந்த வழக்கை நிராகரிக்கக் கோரி விஜய் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த நீதிபதி லட்சுமி நாராயணன், “சொத்துக்களைக் குறைத்துக் காட்டியதற்காகவே ஒருவரது தேர்தலைச் செல்லாது என அறிவிக்க முடியுமா? சூப்பர் ஸ்டாராக இருக்கும் ஒருவர் ரூ.600 கோடி சொத்துக் கணக்கைக் காட்டியுள்ள நிலையில், அதில் ரூ.30 கோடி சொத்தைக் குறிப்பிடவில்லை என்பது எப்படி அவரது தேர்தல் வெற்றியைப் பாதிக்கும்?” என முக்கியக் கேள்விகளை எழுப்பினார்.
மேலும், பெரும் கோடீஸ்வரர்களிடம் அவர்களின் அனைத்துச் சொத்து விபரங்களைக் கேட்டால் உடனடியாகக் கூற முடியாது என்றும், ஆடிட்டர் செய்த சிறு தவறுக்காக முதல்முறையாகப் போட்டியிட்டு வெற்றி பெற்ற விஜய்யைப் பொறுப்பாக்க முடியுமா என்றும் நீதிபதி வினவினார். விஜய் தனது சொத்துப் பட்டியலை ஆடிட்டரை நம்பியே அளித்திருப்பார் என்பதால், ஆடிட்டரின் தவறுக்கு விஜய்யை எப்படிப் பொறுப்பாக்க முடியும் என்றும் சுட்டிக்காட்டினார். சொத்து விவரங்களை முழுமையாகத் தெரிவிக்காதது தேர்வை எந்த அளவுக்குப் பாதிக்கும் என்பது குறித்து அடுத்தகட்ட விசாரணை நடத்தப்படவுள்ள நிலையில், இந்த மனு மீதான விசாரணையை உயர் நீதிமன்றம் நாளைக்கு ஒத்திவைத்துள்ளது.
