தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதற்கு இன்னும் சில மாதங்கள் மட்டுமே உள்ளதால் தற்போது தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கிவிட்டது. அனைத்து அரசியல் கட்சிகளும் ஒரு பக்கம் கூட்டணி பேச்சுவார்த்தை மறுபக்கம் தேர்தல் பிரச்சாரம் என தீவிரமாக தேர்தல் பணியில் செயல்பட்டு வருகின்றன. அதிமுக மற்றும் திமுக இடையே மட்டும்தான் போட்டி என்ற நிலை மாறி தற்போது விஜயும் களத்தில் இறங்கியுள்ளதால் 2026 தேர்தல் களம் பரபரப்பாகவே பார்க்கப்படுகிறது. கரூர் சம்பவத்தை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டு விஜய்க்கு ஆதரவு தெரிவித்து அவரை தங்கள் கூட்டணியில் இணைக்கவும் முயற்சியில் அதிமுக மற்றும் பாஜக உள்ளிட்ட கட்சிகள் ஈடுபட்டு வருகின்றன.
இப்படியான நிலையில் கரூர் துயரத்திற்கு பிறகு மக்கள் மத்தியில் தமிழக வெற்றிக்கலகம் கட்சிக்கான ஆதரவு எப்படி இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ள திமுக ரகசிய சர்வே எடுத்ததாக கூறப்படுகிறது. அந்த சர்வேயில் வரும் தேர்தலில் விஜய் தனித்துப் போட்டியிட்டால் 23 சதவீதம் வாக்குகளை பெறுவார் என தெரியவந்துள்ளது. அத்துடன் 2029 மற்றும் 2031 ஆகிய தேர்தல்களில் திமுகவுக்கு பெரும் போட்டியாளராக விஜயின் தமிழக வெற்றி கழகம் கட்சி உருவெடுக்கும் எனவும் தெரிய வந்துள்ளதாக கூறப்படுகிறது.
