2026 தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகள் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன. இதில் தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. இருப்பினும், ஆட்சி அமைக்கத் தேவையான 118 இடங்களை விட 10 இடங்கள் குறைவாக இருப்பதால், தமிழகத்தில் ஒரு ‘தொங்கு சட்டசபை’ சூழல் நிலவுகிறது. திமுக (59) மற்றும் அதிமுக (47) ஆகிய கட்சிகள் பிரதான அரசியல் எதிரிகள் என்பதால், விஜய்யின் தவெக சிறிய கட்சிகளான காங்கிரஸ், விசிக அல்லது பாமக போன்ற கட்சிகளின் ஆதரவை நாட வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. ஒருவேளை எந்தக் கட்சியும் ஆதரவு தராவிட்டால் விஜய் ஆட்சி அமைப்பது கேள்விக்குறியாக மாறும்.
ஆனால், பிற கட்சிகளின் நேரடி ஆதரவு இல்லாமலேயே விஜய் முதலமைச்சராகப் பொறுப்பேற்று ஆட்சியைத் தொடர ஒரு நுட்பமான வாய்ப்பு உள்ளது. சட்டசபையில் ஒரு கட்சி தனது பலத்தை நிரூபிக்க ‘நம்பிக்கை வாக்கெடுப்பு’ நடத்தப்படும். அப்போது அவையில் இருப்பவர்களில் (Present and Voting) பெரும்பான்மையை நிரூபித்தால் போதுமானது. விஜய் ஆளுநரிடம் உரிமை கோரி முதல்வராகப் பதவியேற்ற பிறகு, அவருக்கு மெஜாரிட்டியை நிரூபிக்க கால அவகாசம் வழங்கப்படும். இந்தச் சூழலில், எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் சிலர் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் வெளிநடப்பு செய்தாலோ அல்லது அவைக்கு வராமல் இருந்தாலோ, மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை குறையும்.
உதாரணமாக, விஜய் தான் போட்டியிட்ட இரண்டு தொகுதிகளில் ஒன்றை ராஜினாமா செய்திருப்பார் மற்றும் தற்காலிக சபாநாயகர் (Pro-tem Speaker) வாக்களிக்க முடியாது என்பதால் தவெகவின் பலம் 106 ஆகக் குறையும். இந்த நிலையில், எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த சுமார் 22-க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் நாளில் அவைக்கு வராமல் இருந்தால், அவையின் மொத்த பலம் 211 ஆகக் குறையும். அப்போது 106 எம்எல்ஏக்களைக் கொண்டுள்ள தவெக மிக எளிதாகத் தனது பெரும்பான்மையை நிரூபித்து, பிற கட்சிகளின் தயவின்றி ஒரு ‘மைனாரிட்டி’ அரசைத் தொடர்ந்து நடத்த முடியும்.
இருப்பினும், இந்த நடைமுறை தற்காலிகமான தீர்வாக மட்டுமே அமையும். ஒருமுறை நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றால் அடுத்த ஆறு மாதங்களுக்கு அச்சுறுத்தல் இல்லை என்றாலும், அதன் பிறகு எதிர்க்கட்சிகள் மீண்டும் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டு வரலாம். முக்கிய மசோதாக்களை நிறைவேற்றும் போதும் தவெக சிக்கல்களைச் சந்திக்க நேரிடும். எனவே, விஜய் ஐந்து ஆண்டு கால ஆட்சியை நிலையாகவும், எவ்வித நெருக்கடியுமின்றியும் நடத்தி முடிக்க வேண்டும் என்றால், நிச்சயம் பிற கட்சிகளின் ஆதரவைப் பெற்று 118 அல்லது அதற்கு மேற்பட்ட எம்எல்ஏக்களின் பலத்தை உறுதிப்படுத்துவதே சாலச்சிறந்தது.
