தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு, நடிகர் விஜய்யின் ‘தெறி’ திரைப்பட மறுவெளியீட்டைத் தள்ளிவைக்க வேண்டும் என்று அக்கட்சியின் நிர்வாகிகள் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணுவிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். ஜனவரி 23-ம் தேதி அஜித்தின் ‘மங்காத்தா’ திரைப்படம் மீண்டும் திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், அதே நாளில் ‘தெறி’ திரைப்படத்தையும் வெளியிட தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்த மோதல் தேவையற்றது என்றும், இது ரசிகர்களிடையே பிளவை ஏற்படுத்தும் என்றும் தவெக தரப்பில் கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது.
சினிமா ரீதியாக விஜய் மற்றும் அஜித் ரசிகர்கள் இடையே எப்போதும் போட்டி நிலவினாலும், தற்போது அரசியல் சூழல் மாறியுள்ளதாக தவெக நிர்வாகிகள் சுட்டிக்காட்டுகின்றனர். 2026 சட்டமன்றத் தேர்தலை இலக்காகக் கொண்டு செயல்படும் தவெகவிற்கு அஜித் ரசிகர்களின் ஆதரவும் வாக்குகளும் மிகவும் அவசியம். இந்நிலையில், இரு திரைப்படங்களும் ஒரே நாளில் வெளியாகி ரசிகர்களிடையே மோதல் ஏற்பட்டால், அது பொதுமக்களிடையே எதிர்மறையான பிம்பத்தை உருவாக்கும் என்றும், அரசியல் எதிரிகள் இதைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்வார்கள் என்றும் அவர்கள் அஞ்சுகின்றனர்.
குறிப்பாக, தவெக மாணவர் அணி நிர்வாகிகள் இது தொடர்பாகப் பதிவிட்டுள்ள செய்தியில், “நாங்கள் விஜய்யைத் திரையரங்கில் பார்ப்பதை விட, தலைமைச் செயலகத்தில் பார்க்கவே விரும்புகிறோம்” என்று உருக்கமாகக் குறிப்பிட்டுள்ளனர். சினிமா மோதல்கள் ரசிகர்களைத் திசைதிருப்பி அவர்களின் அரசியல் கவனத்தைக் குறைத்துவிடும் என்பதால், ‘தெறி’ படத்தின் மறுவெளியீட்டைத் தற்காலிகமாகத் தவிர்த்துவிட்டு, தேர்தல் பணிகளில் முழு வீச்சில் கவனம் செலுத்த வேண்டும் என்பதே தவெகவினரின் பிரதான கோரிக்கையாக உள்ளது.
