“அப்பாவின் அந்த பக்கத்தை வெளியில் கொண்டு வருவேன்…” முதல்வர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் ஓபன் டாக்…!

By Devi Ramu on புரட்டாதி 24, 2026

Spread the love

தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரமான நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய், லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘சிக்மா’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராகத் தனது பயணத்தைத் தொடங்கியுள்ளார். சந்தீப் கிஷன் கதாநாயகனாக நடித்துள்ள இத்திரைப்படம் அக்டோபர் 2 ஆம் தேதி திரைக்கு வரவுள்ள நிலையில், படத்தின் விளம்பரப் பணிகளில் ஜேசன் சஞ்சய் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.

சமீபத்தில் தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தனது தந்தை விஜய் குறித்துப் பல்வேறு தகவல்களைப் பகிர்ந்துள்ளார். அதில், “என் தந்தையின் நகைச்சுவை உணர்வை திரையில் பார்ப்பது எனக்கு மிகவும் பிடிக்கும். வீட்டில் அவருடைய அந்தத் தனிப்பட்டப் பக்கத்தையும் நான் பார்த்திருக்கிறேன். ஒரு கட்டத்தில் அவர் காமெடி கதாபாத்திரங்களைக் குறைத்துக் கொண்டார். எனக்கு அவரை இயக்கும் வாய்ப்பு கிடைத்தால், அப்பாவிற்குள் இருக்கும் அந்த நகைச்சுவைப் பக்கத்தை மீண்டும் திரையில் வெளிக்கொண்டு வருவேன்” என்று தெரிவித்துள்ளார்.

   

மேலும், குடும்பத்தின் பாரம்பரியம் தொடரும் என்றும், திரையுலகில் தனக்கென ஒரு தனி முத்திரையையும் சொந்த அடையாளத்தையும் பதிப்பதற்காகவே இந்தப் படத்தை இயக்கியுள்ளதாகவும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். விஜய்யின் மகன் இயக்குநராக களம் இறங்கியிருப்பது தமிழ் சினிமா ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.