தமிழகத்தில் வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் நாகப்பட்டினம் தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பு தொடர்பாக, தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) மாவட்டச் செயலாளர் சுகுமாரைக் கொலை செய்யச் சதித் திட்டம் தீட்டப்பட்டதாக வெளியாகி உள்ள செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் விஜய் அரசியலில் தடம் பதித்த தொடக்கக் காலம் முதல் அவருடன் பயணித்து வரும் சுகுமாரை, நாகை தொகுதியில் போட்டியிடுமாறு கட்சித் தலைமை கேட்டுக் கொண்டுள்ளது. இதற்கு அவர் சம்மதம் தெரிவித்த நிலையில், அதே தொகுதியில் சீட் பெற விரும்பிய கட்சியைச் சேர்ந்த மற்ற இரு நிர்வாகிகள், கூலிப்படையை ஏவி அவரைத் தீர்த்துக்கட்டத் திட்டமிட்டதாகக் கூறப்படுகிறது.
இந்தச் சதித் திட்டம் குறித்து போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து, மாவட்ட எஸ்.பி. பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. சமீபத்தில் மாற்றுக்கட்சியிலிருந்து தவெக-வில் இணைந்த இரு நபர்களே, சுகுமார் கட்சிப் பணிகளுக்காக சென்னை அல்லது வெளிமாவட்டங்களுக்குச் செல்லும்போது அவரை வழிமறித்துக் கொலை செய்யத் திட்டம் தீட்டியிருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து, சுகுமாருக்குப் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன், கட்சிக்குள் நிலவும் இந்த உட்கட்சிப் பூசல் மற்றும் கொலை முயற்சி சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
