தமிழக அரசியலில் விஜய்யின் புதிய ‘ஃபார்முலா’… “திமுக, அதிமுக கோட்டையில் அடுத்த ஸ்கெட்ச்”… யாரும் எதிர்பார்க்காத மாஸ்டர் பிளான்…!

By Nanthini on ஆனி 8, 2026

Spread the love

தமிழக அரசியல் வரலாற்றில் பாரம்பரியக் கட்சிகளான திமுக மற்றும் அதிமுகவின் நீண்டகால தேர்தல் உத்திகளை, தற்கால சூழலுக்கு ஏற்ப மாற்றியமைத்து புதியதொரு அரசியல் பாய்ச்சலை நிகழ்த்தியுள்ளார் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய். தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்குப் பொறுப்பு அமைச்சர்களை நியமித்துள்ள அவரது இந்த அதிரடி முடிவு, தவெகவை வெறும் தற்காலிக அலையாகக் கருதாமல், ஒரு வலுவான மாற்று அரசியல் சக்தியாகக் கட்டமைப்பதற்கான நீண்டகால வியூகத்தை வெளிப்படுத்துகிறது. கொங்கு மற்றும் நீலகிரி மண்டலங்களில் சமூகச் சமன்பாடுகளையும், பிராந்தியத் தேவைகளையும் குறிவைத்து விஜய் மேற்கொண்டுள்ள இந்த நகர்வுகள் தற்போதைய அரசியல் களத்தை வெகுவாகச் சூடுபிடிக்கச் செய்துள்ளன.

குறிப்பாக, ‘டாலர் சிட்டி’ என்று அழைக்கப்படும் முக்கிய தொழில் நகரமான திருப்பூர் மாவட்டத்திற்கு நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த அருண்ராஜ் பொறுப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். உள்கட்டமைப்பு வசதி குறைபாடுகள், மோசமான சாலைகள், போக்குவரத்து நெரிசல் மற்றும் தொழிலாளர் நலப் பிரச்சினைகள் எனப் பல சவால்கள் நிறைந்த திருப்பூரில் திமுக, அதிமுக மற்றும் பாஜக போன்ற வலுவான கட்சிகள் ஏற்கனவே காலூன்றியுள்ளன. இந்த கடுமையான போட்டிக்களத்தில், நாமக்கல்லில் இருந்து வந்துள்ள அருண்ராஜ் உள்ளூர் மக்களின் நம்பிக்கையைப் பெறுவதுடன், மக்களின் குறைகளை உடனுக்குடன் தீர்க்க திருப்பூரில் தனி அலுவலகத்தை அமைத்துச் செயல்பட்டால் மட்டுமே தவெகவை நோக்கி ஒரு புதிய வாக்கு அலையை உருவாக்க முடியும் என அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.

   

மறுபுறம், மூத்த தலைவர்களின் ஆதிக்கம் நிறைந்த கொங்கு மண்டலத்தின் மற்றொரு பகுதியான நீலகிரி மாவட்டத்திற்கு அவிநாசி தொகுதி சட்டமன்ற உறுப்பினரான கமலி பொறுப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டிருப்பது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. பாரம்பரியமாக திமுக மற்றும் காங்கிரஸ் வசம் உள்ள இந்த மலைப் பிரதேசத்தில், சமூக நீதியின் அடிப்படையில் அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்த கமலியின் மூலம் ஒடுக்கப்பட்ட மக்களின் ஆதரவையும் வாக்குகளையும் திரட்ட விஜய் திட்டமிட்டுள்ளார். மலைப் பகுதிகளின் ஆக்கிரமிப்பு கட்டுமானங்கள் மற்றும் சிதிலமடைந்த உள்கட்டமைப்பு சவால்களைத் திறம்பட கையாள்வதன் மூலமும், அண்ணூர் மற்றும் மேட்டுப்பாளையம் பகுதிகளில் தீவிர களப்பணியாற்றுவதன் மூலமும் கமலமியால் அங்கு கட்சியின் செல்வாக்கை விரிவுபடுத்த முடியும்.

   

இந்த புதிய பொறுப்பாளர்கள் நியமன ஃபார்முலா, விஜய் வெறும் ஒரு சினிமா நட்சத்திரமாகத் தலைதூக்காமல், அடிமட்ட அளவில் வலுவானதொரு கட்சி கட்டமைப்பை உருவாக்க நினைக்கும் முதிர்ச்சியான அரசியலை உணர்த்துகிறது. மாவட்ட வாரியாகப் பிரச்சினைகளைத் தனித்தனியாக அணுகுவதும், தொழில், விவசாயம் மற்றும் சமூகச் சமன்பாடுகளைக் குறிவைத்து காய்களை நகர்த்துவதும் தவெகவின் எதிர்காலத்தை உறுதிப்படுத்தும் உத்திகளாகப் பார்க்கப்படுகின்றன. பாரம்பரியக் கட்சிகளின் வியூகங்களை அவர்களின் பாணியிலேயே எதிர்கொள்ளும் விஜய்யின் இந்த அதிரடி நடவடிக்கைகள், தமிழக அரசியலில் புதியதொரு அத்தியாயத்திற்குப் பிள்ளையார் சுழி போட்டுள்ளன.