அமமுக எம்.எல்.ஏ காமராஜ், தமிழக வெற்றிக் கழகத்திற்கு (தவெக) ஆதரவு அளித்ததாக வெளியான வீடியோ முற்றிலும் போலியானது என்று டிடிவி தினகரன் குற்றம் சாட்டியுள்ளார். அந்த வீடியோ செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட ‘டீப்ஃபேக்’ வீடியோவாக இருக்கலாம் என்று சந்தேகம் எழுப்பியுள்ள அவர், காமராஜின் கையில் இருக்கும் கயிற்றைக் கூட ஏஐ மூலம் உருவாக்கியிருக்க வாய்ப்புள்ளதாகக் கூறியுள்ளார். ஆளுநரிடம் கொடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் ஆதரவுக் கடிதம் ஒரு போலியான ஆவணம் என்றும் அவர் வாதிடுகிறார்.
விஜய் நிறுத்திய வேட்பாளரையே தோற்கடித்து வெற்றி பெற்றவர் காமராஜ் எனும் நிலையில், அவர் தவெக-விற்கு ஆதரவு அளிப்பார் என்பது நகைப்புக்குரியது என்று தினகரன் குறிப்பிட்டுள்ளார். காமராஜ் உண்மையில் கையெழுத்திட்டிருந்தால், அவரை ஏன் நேரில் அழைத்துச் செல்லவில்லை என்றும், அந்த ஒரிஜினல் கடிதம் இப்போது எங்கே இருக்கிறது என்றும் அடுக்கடுக்கான கேள்விகளை அவர் எழுப்பியுள்ளார். ஆட்சி அமைக்க இத்தகைய குறுக்கு வழிகளையும் முறைகேடுகளையும் விஜய் கையாளுவதாக அவர் சாடியுள்ளார்.
ஆட்சி அதிகாரத்திற்கு வருவதற்கு முன்பே இத்தகைய மோசடி வேலைகளில் ஈடுபடும் விஜய், முதலமைச்சர் நாற்காலியில் அமர்ந்தால் அது தமிழகத்திற்குப் ‘பேரழிவாக’ (Disaster) அமையும் என்று தினகரன் கடுமையாக எச்சரித்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக உரிய விசாரணை நடத்த வலியுறுத்தி ஆளுநரிடம் மனு அளித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இந்த விவகாரம் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
