தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரமுமான விஜய் நடிப்பில் உருவான ‘ஜனநாயகன்’ திரைப்படம், தணிக்கை குழுவின் கெடுபிடிகளால் நீண்ட நாட்களாக முடங்கிக் கிடந்த நிலையில், தற்போது இணையத்தில் கசிந்துள்ள சம்பவம் அரசியல் மற்றும் திரை வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த பொங்கலுக்கே வெளியாக வேண்டிய இத்திரைப்படம், விஜய்யின் அரசியல் வருகையை உறுதிப்படுத்தும் விதமாக முழுநீள அரசியல் களத்தைக் கொண்டிருந்தது. படத்தின் ட்ரெய்லர் மற்றும் பாடல்கள் மூலம் எழுந்த எதிர்பார்ப்பு, தற்போது படம் சட்டவிரோதமாக கசிந்ததன் மூலம் தயாரிப்பு தரப்பிற்கு பெரும் பொருளாதார இழப்பை ஏற்படுத்தும் அபாயத்தை உருவாக்கியுள்ளது.
இந்த கசிவுச் சம்பவம் ஒரு திட்டமிடப்பட்ட அரசியல் சதி என்று விஜய்யின் ஆதரவாளர்கள் கடுமையாகச் சாடுகின்றனர். விஜய்யை நேரடியாக அரசியல் களத்தில் எதிர்கொள்ள முடியாதவர்கள், அவரது கடின உழைப்பையும் பொருளாதாரத்தையும் முடக்கும் நோக்கில் இச்செயலை செய்துள்ளதாக தவெக தரப்பினர் குற்றம்சாட்டுகின்றனர். குறிப்பாக, தேர்தல் நேரத்தில் விஜய்யின் மன உறுதியை குலைக்கவே இத்தகைய கீழ்த்தரமான யுக்திகள் கையாளப்படுவதாக அவர்கள் கருதுகின்றனர்.
மாறாக, இது விஜய்யின் தரப்பே திட்டமிட்டு செய்த வேலை என்று எதிர்தரப்பினர் விமர்சிக்கின்றனர். சென்சார் சிக்கலால் திரையரங்குகளில் வெளியாக முடியாத படத்தை, தேர்தல் பரப்புரைக்கு ஆயுதமாகப் பயன்படுத்திக் கொள்ளவே விஜய் தரப்பு இணையத்தில் கசியவிட்டதாக அவர்கள் வாதிடுகின்றனர். தயாரிப்பு மற்றும் சென்சார் குழுவைத் தாண்டி மூன்றாம் நபர்களுக்கு படம் கிடைக்க வாய்ப்பில்லை என்பதால், இது அரசியல் ரீதியான ஒரு ‘சிம்பதி’ தேடும் முயற்சியே என்பது அவர்களது வாதமாக உள்ளது. இருப்பினும், இரு தரப்பு புகார்களுக்கும் தற்போது வரை முறையான ஆதாரங்கள் எதுவுமில்லை.
தற்போது இணையத்தில் பரவி வரும் படத்தின் காட்சிகளை நீக்கும் பணியில் தயாரிப்பு நிறுவனம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இது போன்ற சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடும் சமூக வலைதள கணக்குகள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ரசிகர்களும் பொதுமக்களும் இத்தகைய திருட்டுத்தனமான பதிவுகளைப் பார்க்காமல், ஒரு படைப்பாளியின் உழைப்பிற்கு மதிப்பளிக்க வேண்டும் என்பதே நடுநிலையாளர்களின் கோரிக்கையாக உள்ளது.
