திரையுலகமே ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் நடிகர் விஜய்யின் கடைசித் திரைப்படமான ‘ஜன நாயகன்’ ரிலீஸ் குறித்த புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. தணிக்கைச் சான்றிதழ் (Sensor Certificate) விவகாரத்தில் சென்னை உயர் நீதிமன்றத் தனி நீதிபதி அளித்த உத்தரவை, அண்மையில் தலைமை நீதிபதி அமர்வு ரத்து செய்திருந்தது. நீதிமன்றத்தில் தொடர்ந்து போராடுவது படத்தின் வெளியீட்டை மேலும் தாமதப்படுத்தும் எனக் கருதிய தயாரிப்பு நிறுவனம் , தனி நீதிபதி முன்னிலையில் உள்ள வழக்கை வாபஸ் பெற முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.
வழக்கை வாபஸ் பெற்ற பிறகு, சென்சார் போர்டின் மறுஆய்வுக் குழுவிடம் (Revising Committee) விண்ணப்பித்து சுமார் 20 நாட்களுக்குள் சான்றிதழ் பெறப் படக்குழு திட்டமிட்டுள்ளது. இந்தச் செயல்முறை வெற்றிகரமாக முடிந்தால், பிப்ரவரி மாத இறுதியில் ‘ஜன நாயகன்’ உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதலில் ஜனவரி 9-ஆம் தேதி பொங்கல் பண்டிகையை ஒட்டி வெளியாகவிருந்த இப்படம், தற்போது அனைத்துத் தடைகளையும் தாண்டி பிப்ரவரி இறுதியில் ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் எனத் திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
