நவீன டிஜிட்டல் காலத்தில் சமூக வலைதளங்களில் பரவும் போலிச் செய்திகள், சோடிக்கப்பட்ட படங்கள் மற்றும் தவறான வீடியோக்களைக் கண்டறிவது பெரும் சவாலாக மாறியுள்ளது. குறிப்பாக, அரசுத் திட்டங்கள், அரசின் செயல்பாடுகள் மற்றும் தலைவர்கள் தொடர்பாகப் பரப்பப்படும் வதந்திகளால் ஏற்படும் பதற்றங்களைத் தவிர்க்கும் பொருட்டு, கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் ‘உண்மைச் சரிபார்ப்புக் குழு’ உருவாக்கப்பட்டது. சமூக ஊடகங்களில் பரவும் தவறானத் தகவல்களுக்கு ஆதாரப்பூர்வமான விளக்கங்களை வழங்கி, உண்மையை மக்களுக்குத் தெரிவிப்பதே இக்குழுவின் முதன்மை நோக்கமாக இருந்தது.
கடந்த திமுக அரசின் போது, இக்குழுவின் திட்ட இயக்குநராக ‘யூடர்ன்’ இணையதளத்தின் ஆசிரியர் ஐயன் கார்த்திகேயன் நியமிக்கப்பட்டிருந்தார். அவருக்கு மாத ஊதியமாக ரூ. 3 லட்சம் நிர்ணயிக்கப்பட்டிருந்ததுடன், அலுவல் பயன்பாட்டிற்காகத் தனி வாகனமும் வழங்கப்பட்டிருந்தது. மேலும், அப்போதைய குழுவில் சுமார் 60 பணியாளர்கள் வரை செயல்பட்டு வந்தனர். அரசின் பல்வேறு திட்டங்கள் மற்றும் செய்திகள் குறித்த தகவல்களைத் தொடர்ச்சியாகக் கண்காணித்து, அதிகாரப்பூர்வ விளக்கங்களை வழங்கி வந்ததில் இக்குழு முக்கியப் பங்கு வகித்தது.
தற்போது புதிதாகப் பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக் கழக அரசு, இந்த அமைப்பில் பல்வேறு சீரமைப்புகளையும் மாற்றங்களையும் மேற்கொண்டுள்ளது. இதன்படி, ‘உண்மைச் சரிபார்ப்புக் குழு’ என்ற பெயர் மாற்றம் செய்யப்பட்டு, இனி ‘தகவல் நம்பகத்தன்மைப் பிரிவு’ என்ற புதிய பெயரில் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், செலவினங்களைக் குறைக்கும் வகையில் திட்ட இயக்குநரின் ஊதியம் குறைக்கப்பட்டு, அவருக்கு வழங்கப்பட்டிருந்த அலுவல் வாகன வசதியும் திரும்பப் பெறப்பட்டுள்ளது. இத்துறையின் பணியாளர்களின் எண்ணிக்கையும் 60-இல் இருந்து 14 ஆக அதிரடியாகக் குறைக்கப்பட்டுள்ளது.
செய்தி மற்றும் மக்கள் தொடர்புத் துறையின் கீழ் இயங்கும் இந்தப் புதிய ‘தகவல் நம்பகத்தன்மைப் பிரிவின்’ தலைவராக தவெக சமூக ஊடகப் பிரிவுத் தலைவரும், ஆன்லைன் தளபதி ஃபேன்ஸ் கிளப் நிறுவனருமான குரு தலைவா நியமிக்கப்பட்டுள்ளார். இதன் ஒருங்கிணைப்பாளராக பிரசன்னாவும், மக்கள் தொடர்பு அலுவலராக சுஜிதாவும், சமூக ஊடகப் பிரிவின் சிறப்பு அலுவலராக தவெக தகவல் தொழில்நுட்பப் பிரிவு ஒருங்கிணைப்பாளர் திவ்யாவும் நியமிக்கப்பட்டுள்ளனர். சமூக வலைதள வதந்திகளை முறியடித்து, அதிகாரப்பூர்வத் தகவல்களை வெளியிட்டு தேவையற்ற பதற்றங்களைத் தடுப்பதே இந்தப் பிரிவின் முதன்மைப் பணியாக இருக்கும் எனக் தெரிவிக்கப்பட்டுள்ளது.
