ஒவ்வொரு அரசியல் தலைவர்கள் அல்லது உட்சபட்ச நடிகர்கள் எப்போதும் மக்களிடம் பேசும் போது, அவர்கள் கூறும் ஒரு சில வரிகள் அவர்களது அடையாளமாக மாறிப் போவது உண்டு. உதாரணத்திற்கு மறைந்த ஜெயலலிதா எப்போதும், உங்களால் நான், உங்களுக்காகவே நான் என்று கர்ஜிப்பார். அதேப் போல மறைந்த கலைஞர் கருணாநிதி என் உயிரினும் மேலான உடன்பிறப்புகளே என்பார். அப்படி அரசியல் தலைவர்களை தாண்டி நடிகர்களும் தங்களுக்கான ஒரு குறிப்பிட்ட வரிகளை வைத்துக் கொண்டனர்.
நடிகர் விஜய், எப்போதும் ரசிகர்களிடத்தில் பேசும் போது என் நெஞ்சில் குடியிருக்கும் ரசிகர்களே என்பார். சமீபத்தில் வணக்கம் நண்பா, நண்பி என மாற்றியிருக்கிறார். ஒவ்வொரு படத்தின் இசை வெளியீட்டு விழாவின் போது, இந்த வரிகளை கூறித் தான் உரையையே தொடங்குவார் விஜய். இந்த வரிகளுக்காகவே ரசிகர்கள் அவரை விரும்புவதுண்டு. ஆனால் உண்மையாகவே இந்த வரிகளை முதன் முதலில் பயன்படுத்தியது விஜய் தான் என்று நினைக்கின்றீர்களா? இல்லை.. அவருக்கு முன்பே பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் இந்த வரிகளை பயன்படுத்தியுள்ளார்.
ஆம்.. 1960-ம் ஆண்டு சிவாஜி கணேசன் மற்றும் வைஜயந்தி மாலா நடிப்பில் வெளியான திரைப்படம் இரும்புத் திரை. எஸ்.வி. வெங்கட்ராமன் இசையில் உருவாகி இருந்த இந்தப் படத்தில், ஒரு பாடல் இடம்பெற்றிருக்கும். “நெஞ்சில் குடியிருக்கும் அன்பருக்கு நானிருக்கும் நிலைமை என்னவென்று தெரியுமா? என ஆரம்பிக்கும் அந்த பாடல். இந்த பாடலுக்கு வரிகள் எழுதியது பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம். இப்பாடல் வரிகள் காதலையும், தமிழையும், கற்பனையையும் கலந்து அமைந்திருக்கும். இப்படியான வரிகளை அவரால் மட்டுமே தர முடியும். ஆக விஜய்க்கு முன்பு 1960-ம் ஆண்டிலேயே நெஞ்சில் குடியிருக்கும் என்ற வார்த்தைகளை பயன்படுத்திய பெருமை பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரத்தையே சாரும்.