தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. அதேசமயம் கூட்டணி குறித்த பேச்சு வார்த்தையும் மும்முரமாக நடந்து கொண்டிருக்கிறது. அதிமுக மற்றும் திமுக இடையே தான் போட்டி என்ற நிலைமை மாறி தற்போது விஜய் களத்தில் இறங்கியுள்ளதால் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் பரபரப்பாக பார்க்கப்படுகிறது. 2026 சட்டமன்ற தேர்தலை இலக்காக கொண்டு விஜயின் தமிழக வெற்றி கழகம் அரசியல் களத்தில் முதல்முறையாக தேர்தலை எதிர்கொள்ள உள்ளது. இதற்காக கடந்த ஆறு மாதங்களாக விஜய் தீவிர அரசியல் பணியில் ஈடுபட்டு வருகிறார்.
குறிப்பாக கட்சியில் 2 கோடிக்கும் அதிகமான உறுப்பினர் சேர்க்கை, மாவட்ட வாரியாக வாக்குச்சாவடி குழு கூட்டம் அமைப்பது, மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் ஆகியவற்றை நடத்தி கட்சியை வலுப்படுத்தும் நோக்கில் ஈடுபட்டு வருகின்றார். தொடர்ந்து பல பிரச்சினைகளுக்கு குரல் கொடுத்து வரும் விஜய் சமீபத்தில் தன்னுடைய தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி இருந்தார். இதுவரை இரண்டு கட்டமாக பிரச்சாரம் நடந்துள்ள நிலையில் மூன்றாவது கட்டமாக கரூரில் சனிக்கிழமை பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார்.
இந்நிலையில் விஜயின் கடலூர் பரப்புரை பயணத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. முன்பு நவம்பர் 22ஆம் தேதி திட்டமிட்டு இருந்த அந்த பயணம் அக்டோபர் 11ஆம் தேதிக்கு மாற்றியமைக்கப்பட்டுள்ளது. அதன்படி கடலூரில் தலைமை தபால் நிலையம் மற்றும் உழவர் சந்தை ஆகிய இடங்களில் பரப்புரைக்கு அனுமதி கேட்டு கடலூர் எஸ்பிக்கு தமிழக வெற்றி கழகம் தரப்பில் கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வாரம் விஜய் கரூர் மற்றும் நாமக்கல்லில் பரப்புரை மேற்கொள்ள உள்ளது குறிப்பிடத்தக்கது.
