ரஜினிக்கு தம்பியாக நடிக்க வந்த வாய்ப்பை ஏற்ற விஜயகாந்த்.. மறுத்த இப்ராஹிம் ராவுத்தர்.. ஏன் தெரியுமா..?

By vinoth

Updated on:

தமிழ் சினிமாவில் 80 களிலும், 90 களிலும் மிகப்பெரிய ஆக்‌ஷன் ஹீரோவாக வலம் வந்தவர் விஜயகாந்த். அவர் நடித்த ஊமை விழிகள், கேப்டன் பிரபாகரன், புலன் விசாரணை, வானத்தைப் போல, சின்னக்கவுண்டர் மற்றும் ரமணா உள்ளிட்ட படங்கள் எல்லாம் பிளாக்பஸ்டர் ஹிட்களாக அமைந்தன.

2005 ஆம் ஆண்டு தேசிய முற்போக்கு திராவிடக் கழகம் என்ற கட்சியைத் தொடங்கிய அவர் சினிமாவில் இருந்து விலகினார். அரசியலில் எதிர்க்கட்சி தலைவர் வரை உயர்ந்த விஜயகாந்த் தன்னுடைய வீழ்ச்சியை சந்தித்தார்.

   
Rajinikanth Vijayakanth

கடந்த சில ஆண்டுகளாக உடல்நலக்குறைவால் பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளாமல் இருந்த அவர் கடந்த டிசம்பர் மாதம் இயற்கை எய்தினார். அவருக்கு மிகப்பெரிய அளவில் திரையுலகினரும், அரசியல் பிரமுகர்களும் பொதுமக்களும் அஞ்சலி செலுத்தினர்.

இனிக்கும் இளமை என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான விஜயகாந்த் தொடக்கத்தில் வில்லன் வேடத்தில் சில படங்களில் நடித்தார்.  தொடக்கத்தில் அவருக்கு கதாநாயகன் வேடம் எளிதாகக் கிடைக்கவில்லை. கிடைத்த ஒன்றிரண்டு படங்களும் சொல்லிக்கொள்ளும் படி ஓடவில்லை. அதனால் அவர் சில ஆண்டுகள் வாய்ப்பில்லாமல் இருக்கவேண்டிய சூழல் உருவானது.

11745824 940112602714421 7212634611909513173 n

இந்த நிலையில் ரஜினியின் முரட்டுக்காளை படத்தில் ரஜினிகாந்தின் சகோதரர்களில் ஒருவராக நடிக்கும் வாய்ப்பு ஏவிஎம் நிறுவனத்திடம் இருந்து வந்துள்ளது. அதை மகிழ்ச்சியாக ஏற்ற விஜயகாந்த் மிகப்பெரிய தொகையை முன்பணமாகவும் வாங்கியுள்ளார். இதை தன்னுடைய நெருங்கிய நண்பரான இப்ராஹிம் ராவுத்தரிடம் கூறியுள்ளார்.

விஜயகாந்தின் இந்த முடிவால் கோபமான இப்ராஹிம் ராவுத்தர் விஜயகாந்தை திட்டியுள்ளார். அவரிடம் “நான் உன்னை எவ்வளவு பெரிய ஹீரோவாக்க முயற்சி செய்து போராடிக் கொண்டிருக்கிறேன். நீ இப்படி சிறிய வேடத்தில் நடிக்க ஆசைப்படுகிறாயே. ஒருமுறை இதுபோல வேடத்தில் நடித்துவிட்டால் உனக்கு அப்புறம் கதாநாயகன் வேடமே வராமல் போய்விடும்” என கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

Rajini Vijayakanth

பின்னர் ஏவிஎம் நிறுவனத்திடம் சென்று வாங்கிய முன்பணத்தை திருப்பிக் கொடுத்துள்ளார் ராவுத்தர். ராவுத்தரின் அந்த முடிவு விஜயகாந்தின் சினிமா வாழ்க்கையில் ஒரு முக்கியமான முடிவாக அமைந்தது என்றால் மிகையாகாது. அதன் பின்னர்தான் பல ஹிட் படங்களைக் கொடுத்து  விஜயகாந்த் ரஜினி, கமலுக்கு அடுத்த இடத்தில் தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளார்.