கடந்த 25 ஆண்டுகளுக்கு முன் தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவராக பொறுப்பேற்றார் விஜயகாந்த். செயலாளராக சரத்குமார் இருந்தார். நடிகர் சங்கத்துக்கு நிறைய கடன்களை இருப்பதை தெரிந்துக்கொண்ட விஜயகாந்த், கோடி கோடியாக நடிகர்கள் சம்பளம் வாங்கியும் இதை அடைக்கவில்லையே என வருத்தப்பட்டார். பெரிய நடிகர்கள் சில லட்சங்கள் தந்தால் கூட போதும் என அவர் வலியுறுத்தினார்.
ஆனால் எந்த நடிகரும் தங்களது வருமானத்தில் இருந்து ஒரு ரூபாய் கூட சங்கத்துக்காக தர முன்வரவில்லை. இதையடுத்து விஜயகாந்த் சிங்கப்பூர், மலேசியா, துபாய் போன்ற நாடுகளில் கலைநிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தார். இதில் ரஜினி, கமல் போன்ற உச்ச நட்சத்திரங்களும் கலந்துக்கொண்டனர். இதில் கிடைத்த கணிசமான தொகையை கொண்டு நடிகர் சங்கத்தில் பல ஆண்டுகளாக இருந்த கடனை மொத்தமாக அடைத்தார்.

இதை பார்த்து தமிழ் சினிமா நடிகர்களும், தயாரிப்பாளர்களும், இயக்குநர்களும் அசந்து போயினர். ஏனெனில் எம்ஜிஆர், சிவாஜி காலத்தில் இருந்தே நடிகர் சங்கத்தில் கடன் பிரச்னைகள் இருந்த நிலையில், அவர்கள் கூட அதை அடைக்க முயற்சி எடுக்கவில்லை. ஆனால் விஜயகாந்த் என்ற தனிமனிதரின் முயற்சியால் அது சாத்தியமானது. இந்நிலையில், வெளிநாடுகளில் நடந்த கலைநிகழ்ச்சிகளில் ரஜினி, கமல் உள்ளிட்ட பெரிய நடிகர்களே கலந்துக்கொண்ட நிலையில், அஜீத்குமார் மட்டும் வரவில்லை. அப்போது அவர் வளர்ந்து வரும் நடிகராக இருந்தார்.

இந்த சூழலில் கலைநிகழ்ச்சிக்கு வராத அஜீத்குமார் குறித்து விஜயகாந்திடம் சிலர் பேசியுள்ளனர். அப்போது அஜீத்குமார் யாரையும் மதிக்க மாட்டார். யார் சொன்னாலும் கேட்க மாட்டார் என்று அவதூறாக கூறிவிட்டனர். இந்நிலையில், நடிகர் சங்க அலுவலகத்துக்கு அஜீத்குமார் நேரில் வந்து விஜயகாந்தை சந்தித்தார். அப்போது சில லட்சங்களை அவரிடம் நடிகர் சங்கத்துக்கு நிதியாக தந்தார். அந்த பணத்தை விஜயகாந்த் ஏற்கவில்லை. வெளிநாட்டில் கலைநிகழ்ச்சி நடத்தினோம். ரஜினி, கமலே கலந்துக்கொண்டனர். நீங்கள் வரவில்லை. அவர்களை விட நீங்கள் பெரிய ஆளா, இந்த பணம் எனக்கு தேவையில்லை. என கோபப்பட்டுள்ளார்.

அப்போது விஜயகாந்தை பக்கத்து அறைக்கு வருமாறு அழைத்த அஜீத்குமார், தனது சட்டையை கழட்டி முதுகை காட்டியுள்ளார். அதில் 32 ஆபரேசன் செய்ததற்கான தழும்புகள் இருந்துள்ளது. மேலும் தன்னிடம் இருந்த நிறைய மாத்திரைகளையும் எடுத்து காட்டியுள்ளார். பதறிப்போன விஜயகாந்த் என்ன இது, என்று கேட்டதற்கு, எனக்கு விபத்து நடந்து, தினமும் இத்தனை மாத்திரைகள் சாப்பிடுகிறேன். அதனால்தான் நான் வரமுடியவில்லை என்று விளக்கம் அளித்துள்ளார். அவரது நிலையை பார்த்து கண்ணீர் விட்டு கலங்கிய விஜயகாந்த், அவர் தந்த நிதியை பெற்றுக்கொண்டார்.
