முன்னாள் அதிமுக அமைச்சர் விஜயபாஸ்கர், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவரும் முதலமைச்சருமான விஜய் முன்னிலையில் கட்சியில் இணைய நேரம் கேட்டுள்ளார். ஏற்கனவே வெல்லமண்டி நடராஜன், கடம்பூர் ராஜு போன்ற முன்னாள் அமைச்சர்கள் தவெக பொதுச்செயலாளர் ஆனந்த் முன்னிலையில் இணைந்துள்ள நிலையில், புதுக்கோட்டையில் மிகுந்த செல்வாக்குடைய விஜயபாஸ்கர் பல்லாயிரக்கணக்கான ஆதரவாளர்களுடன் விஜய் முன்னிலையிலேயே இணையத் திட்டமிட்டுள்ளார். இதுதொடர்பாக புதுக்கோட்டையில் அவரது ஆதரவாளர்கள் நடத்திய கூட்டத்தில், விஜயபாஸ்கரின் தவெக இணைப்பிற்கு முழு மனதுடன் ஆதரவு தெரிவித்து தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது.
விராலிமலை தொகுதியில் தொடர்ந்து 4 முறை அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ள விஜயபாஸ்கர் தவெக-வில் இணைவது, அதிமுகவிற்கு மிகப்பெரிய இழப்பாகக் கருதப்படுகிறது. அவர் தவெக-வில் இணைந்தால், இன்னும் சில மாதங்களில் நடைபெற உள்ள இடைத்தேர்தலில் விராலிமலை தொகுதியில் தவெக சார்பில் களமிறங்குவார் என்றும், அதில் வெற்றி பெற்றால் தவெக அமைச்சரவையில் அவருக்கு இடம் அளிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. விஜயபாஸ்கரின் அரசியல் அனுபவத்தால், வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் புதுக்கோட்டையில் தவெக மிகப்பெரிய அளவில் ஆதிக்கம் செலுத்தி அக்கட்சியின் கோட்டையாக மாறும் என அரசியல் நிபுணர்கள் கருதுகின்றனர்.
அதேசமயம், விஜயபாஸ்கர் போன்ற அனுபவமிகுந்த மற்றும் செல்வாக்குள்ள அதிமுக தலைவர்கள் தவெக-வில் இணைவது, கட்சி தொடங்கிய ஆரம்பக் காலம் முதலே தவெக-வில் உழைத்து வரும் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளிடையே மிகப்பெரிய வேதனையையும் அதிருப்தியையும் உண்டாக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
